இந்தியப் பொருளாதாரம் இந்த நிதியாண்டில் 5.9% வளரும் - IMF கணிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5.90% வளர்ச்சி காணும் என்றும், இதன் மூலம் உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்து கணிக்கும் சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்), அது குறித்த தனது சமீபத்திய அறிக்கையை கடந்த 11-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சர்வதேச அளவில் நிதித்துறையில் ஏற்பட்டுள்ள கொதிநிலை, பணவீக்கம், ரஷ்யா- உக்ரைன் போர், தொடரும் கரோனா தாக்கம் ஆகியவை பல நாடுகளின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றுக்கு மத்தியில், இந்திய பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 5.9 சதவீதம் வளர்ச்சி காண இருப்பதன் மூலம், உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் இருக்கும்" என தெரிவித்துள்ள ஐஎம்எஃப், சவால்களுக்கு மத்தியில் நம்பிக்கை தரும் ஒளியாக இந்தியா திகழ்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டில், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.8 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டுக்கான உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாக இருக்கும் என்றும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

"இந்தியா மேற்கொண்ட டிஜிட்டல்மயமாக்கம், கரோனா காலத்தில் சவால்களை எதிர்கொள்வதற்கு பெரிதும் உதவியது என்றாலும், அது மட்டுமே அதன் வளர்ச்சிக்குக் காரணம் என கூற முடியாது. வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியது, வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்தது ஆகியவையும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம்" என்று ஐஎம்எஃப்-ன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார். மேலும் அவர், சர்வதேச பொருளாதாரத்தில் நம்பிக்கை தரும் ஒளிப்புள்ளியாக திகழும் இந்தியா, 2023ம் ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சியில் 15 சதவீத பங்கினை வகிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் இந்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் இருப்பதாகவும் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார். வளர்ச்சிக்கான தேவைகளுக்காக நிதி ஒதுக்க வேண்டிய அதேநேரத்தில், முதலீட்டு திட்டங்களுக்காகவும் உரிய நிதியை ஒதுக்கி வளர்ச்சியை சமநிலைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு தனது பட்ஜெட்டில் மேற்கொண்டதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதன்மூலம், நிலையான வளர்ச்சியை இந்தியா பெருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE