புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை ‘விஷப்பாம்பு’ என விமர்சித்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் சோனியா காந்தியை ‘விஷப் பெண்’என்றும், பாகிஸ்தான், சீன உளவாளி என்றும் விமர்ச்சித்துள்ளார்.
கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், அங்கு பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. கட்சிகளுக்கு இடையேயான வார்த்தைப் போர்களும் வலுத்துவருகின்றன.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே," எப்போதும் தவறு செய்யாதீர்கள். மோடி ஒரு விஷப் பாம்பைப் போன்றவர். அவர் விஷம் இல்லை என்று நீங்கள் சொன்னால் சுவைத்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அப்படிச் செய்யாதீர்கள். மீறி செய்தால், உங்கள் உயிர் போய்விடும்" என்று தெரிவித்திருந்தார்.
பின்னர், தான் எந்த தனிமனிதரையும் தாக்கிப்பேசவில்லை எனவும் தனது பேச்சு பாஜகவைப் பற்றியதே என்று விளக்கம் அளித்திருந்தார்.
» கர்நாடக தேர்தல் | பிரதமர் மோடியை பழிப்பதன் மூலம் காங்கிரஸால் வெற்றி பெற முடியாது: அமித் ஷா
» 6 ஆண்டுகளில் 183 என்கவுன்ட்டர்கள்: உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
உளவாளி சோனியா காந்தி: இந்த நிலையில் கார்கேவின் இந்தப் பேச்சிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடாகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் சோனியா காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். விஜயபுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் யத்னால், அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார்.
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள யெல்புர்கா பகுதியில் இன்று (ஏப்.28) நடந்த பேரணி பொதுக்கூட்டத்தில் பேசிய யத்னால்,"மல்லிகார்ஜுன கார்கே நரேந்திர மோடியை விஷப்பாம்பு என்று அழைக்கிறார். மூத்த தலைவராக அவர் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான அவர், பிரதமர் குறித்து எப்படி உரையாற்ற வேண்டும்?
பிரதமர் மோடி மீது உலகமே மரியாதை வைத்துள்ளது. ஒரு காலத்தில் விசா தர மறுத்த அமெரிக்கா, இப்போது அவரை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கிறது. ஆனால் நீங்கள் (கார்கே) பிரதமரை விஷப்பாம்பு என்று அழைக்கிறீர்கள்.
நீங்களெல்லாம் பெரிதும் நம்பியிருந்த சோனியா காந்தி ஒரு விஷப்பெண்ணா? சோனியா காந்தி நாட்டை அழித்து, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் உளவாளியாக வேலை பார்த்தார். மோடியின் அரசை கவிழ்க்க மணி சங்கர அய்யர் பாகிஸ்தான், சீனாவிடம் உதவி கோரினார். டீ விற்றவர் பிரதமராக ஆகியிருக்கிறார் என்று பிரதமர் மோடியை அவர்கள் கேலி செய்தார்கள். அதன் விளைவாக மக்களவையில் எதிர்க்கட்சி இடத்தைக் கூட பெறமுடியாத அளவுக்கு காங்கிரஸ் மொத்தமாக துடைத்தெறியப்பட்டது. பிரதமர் மோடியை குறித்து கார்கே பேசியதை பாஜகவைச் சேர்ந்தவர்கள் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று பேசினார்.
காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்: இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது ட்விட்டர் பதிவில்,"ஒவ்வொரு தேர்தலின் போதும், அவர்கள் சோனியா காந்தி குறித்து புதிய அவதூறு பரப்பி அவரை அவமதிக்கின்றனர். தனது வாழ்நாள் முழுமையும் கண்ணியத்துடனும் கருணையுடனும் அவர் வாழ்ந்து வருகிறார். எங்கள் தலைவருக்கு எதிராக பாஜக அவமானகரமான மொழிகளில் பேசி தன்னைத் தாழ்த்திக் கொள்கிறது. மோடி ஜி நீங்கள் இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா,"கர்நாடகா பாஜக மற்றும் அதன் தலைவர்கள் தங்களின் சமநிலை, அரசியல் நடுநிலையை இழந்து விட்டனர். சட்டப்பேரவைத் தேர்தலில் முழு தோல்வியை தழுவ உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் தொடர்ந்து அவமதிக்கும் வார்த்தைகளையும் சேற்றையும் வாரி வீசுகின்றனர். இதனால் காங்கிரஸ் தலைவர்களை அவமதிக்கும் அவர்களுடைய அழுக்கான மனநிலையை தொடர்ந்து வெளிப்படுத்துகிறது. பாஜக தலைவர்களும், பிரதமர் மோடியும் நேரு குடும்பத்தினை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர்.பிரதமர் மோடியே கடந்த காலத்தில் சோனியா காந்தியை ‘காங்கிரஸ் கி வித்வா’ ‘ஜெர்சி மாடு’ என தரம் தாழ்த்தி விமர்சித்திருக்கிறார். பிரதமர் மோடியின் குணாதிசியமும் கண்ணியமும் இன்று சோதனைக்குள்ளாகியுள்ளது. அவருக்கு கண்ணியம் இருக்குமானால், அவர் உடனடியாக பசனகவுடா பாட்டீல் யத்னாலை பாஜகவில் இருந்து நீக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சோனியா காந்தி குறித்த பாஜக எம்எல்ஏவின் விமர்சனத்திற்காக, பிரதமர் மோடி, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், யத்னாலை பாஜகவிலிருந்து நீக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவிற்கு வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago