“இந்திய - சீன எல்லை பொதுவாக நிலையாகவே உள்ளது” - ராஜ்நாத்திடம் கூறிய சீன அமைச்சர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய - சீன எல்லை பொதுவாக நிலையாகவே உள்ளது என்று இந்தியா வந்துள்ள சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷங்ஃபு தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷங்ஃபு டெல்லி வந்துள்ளார். அவருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நேற்று 45 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, எல்லை ஒப்பந்தங்களை சீனா மீறுவதால் இருதரப்பு உறவுகளின் முழு அடிப்படையும் பாதிக்கப்படுவதாக அவரிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தச் சந்திப்பு தொடர்பாக சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: லீ ஷங்ஃபு - ராஜ்நாத் சிங் சந்திப்பின்போது இருதரப்பு ராணுவம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்த கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அப்போது, "சீனா - இந்தியா எல்லையில் நிலைமை தற்போது பொதுவாக நிலையானதாக உள்ளது. இரு தரப்பும் ராணுவ மற்றும் தூதரக வழிகள் மூலம் தொடர்பை பேணி வருகின்றன" என்று லீ ஷங்ஃபு குறிப்பிட்டார்.

"இரு தரப்பும் தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும். இருதரப்பு உறவுகளில் எல்லைப் பிரச்சினைக்கு பொருத்தமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும், எல்லையில் நிலைமை இயல்பு நிலைக்கு மாறுவதை ஊக்குவிக்க வேண்டும்" என்று லீ ஷங்ஃபு தெரிவித்தார்.

"இரு நாடுகளின் இராணுவத்திற்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் சரியான பங்களிப்பை வழங்குவதற்கு இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது" என்று ராஜ்நாத் சிங்கிடம் லீ ஷங்ஃபு தெரிவித்தார்.

மேலும், அண்டை நாடுகளாகவும், முக்கியமான வளரும் நாடுகளாகவும் இருக்கும் சீனாவும் இந்தியாவும் வேறுபாடுகளை விட பொதுவான நலன்களை அதிகம் பகிர்ந்து கொள்கின்றன என்றும் லீ ஷங்ஃபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE