கர்நாடகாவில் ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்குப் பதிவு

By இரா.வினோத்


பெங்களூரு: க‌ர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து மோசடி செய்ததாக, ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளர் குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் காந்தி நகர் தொகுதியில் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த குமார் (52) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் கடந்த 20ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், 'இரட்டை இலை சின்னம் எங்களுக்கு சொந்தமானது. அதனால், ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது' என வலியுறுத்தி இருந்தார். அதே வேளையில் காந்தி நகர் வேட்பாளர் குமார் அதிமுகவின் பெயரில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பி பார்ம் பெற்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.

இதை எதிர்த்து கர்நாடக அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார், போலியான ஆவணங்கள் மூலம் இரட்டை இலை சின்னத்தை குமார் கோரியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நீதிமன்ற அனுமதியின்பேரில் குமார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு பரிந்துரை செய்தனர்.

அதன்பேரில் காட்டன்பேட்டை போலீஸார், ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் குமார் மீது தேர்தல் ஆணையத்துக்கு தவறான தகவல் அளித்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 1860 உட்பிரிவு 171 ஜீ - பிரிவின் கீழ் வ‌ழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, கடந்த 24-ம் தேதி பாஜக மேலிடத்தின் வேண்டுகோளின் காரணமாக குமார் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE