டெல்லி மேயர் பதவியை மீண்டும் தக்கவைத்தது ஆம் ஆத்மி - கடைசி நேரத்தில் பாஜக வாபஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் (எம்சிடி), மேயர் பதவிக்காக ஒவ்வொரு வருடமும் தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்த மேயர்பதவி, முதல் வருடம் மகளிருக்காகவும், மூன்றாவது வருடம் பட்டியல் இனத்தவருக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது. இதர மூன்று வருடங்களும் பொதுப் பிரிவினருக்கானது. இங்கு தனி மெஜாரிட்டியான ஆம் ஆத்மி கடந்த வருட மகளிருக்கான மேயர் பதவியை வென்றிருந்தது.

பொதுப்பிரிவினருக்கான இந்தமுறையும் ஆம் ஆத்மி அதே வேட்பாளர்களை நிறுத்தியது. மேயராக ஷெல்லி ஓபராயும் துணை மேயராக ஆலே முகம்மதுவும் மீண்டும் போட்டியிட்டனர். பாஜக சார்பில் சிக்‌ஷா ராய் மேயர் பதவிக்கும், சோனி பாண்டே துணை மேயருக்கும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசிநேரத்தில் ஆம்ஆத்மியின் 2 உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். இதனால், போட்டியின் முடிவு கணிக்க முடியாமல் இருந்தது. எனினும், கடைசிநேரத்தில் பாஜகவின் 2 வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால், ஆம் ஆத்மியினர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

இது குறித்து பாஜகவின் மேயர்வேட்பாளர் சிக்‌ஷா ராய் கூறுகையில், ‘எம்சிடியின் முக்கிய அமைப்பான நிலைக்குழுவிற்கான தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. இந்த குழு தேர்ந்தெடுக்கப்படாமல், மேயர் தேர்தலால் எந்தப் பலனும் இல்லை. எனவே, எங்கள் மனுக்களை போட்டியிலிருந்து வாபஸ் பெறுகிறோம்’’ என்றார்.

டெல்லிக்கான எந்தவொரு திட்டமும் நிலைக்குழு மூலமாகவே எம்சிடியின் முன் வைக்கப்படுகிறது. எம்சிடியின் ஆறு உறுப்பினர்கள் உள்ளிட்ட 18 பேரை கொண்டது இந்த நிலைக்குழு. இதன் தேர்தலிலும் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவிற்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பிரச்சினை டெல்லி நீதிமன்ற வழக்காகி உள்ளது. இதன் தீர்ப்பு இன்னும் வராத நிலையில், இதை அறிந்தே பாஜக தம் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றது. இதை பாஜகவின் தோல்வி என்றே ஆம் ஆத்மி கட்சியினர் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் எம்சிடி வட்டாரங்கள் கூறும்போது, பாஜகவால் கூடுதல் உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க முடியாததுதான் வாபஸிற்கானக் காரணம். பலரும் பாஜகவிடம் அளித்த ரகசிய வாக்குறுதியை நிறைவேற்றாத நிலை உருவாகி இருந்தது.

எனினும், காங்கிரஸ் மற்றும்ஆம் ஆத்மியின் சில உறுப்பினர்களும் இணைந்து ஆளும் கட்சியின்மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எந்நேரமும் கொண்டுவருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது’’ எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE