பெங்களூரு: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா, டாக்டர் பர்மேஷ்வார், மாநில காங்கிரஸ் தலைவர் ஆகியோர் பெங்களூரு ஹைகிரவுண்ட் காவல் நிலையத்திற்கு இன்று (வியாழக்கிழமை) வந்தனர். கர்நாடாகாவில் நடந்த பாஜக பேரணியில், காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாகவும் வெறுப்பைத் தூண்டும் வகையிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர். இந்தப் புகார் மனுவின் அடிப்படையில், அமித் ஷா மற்றும் பாஜக பேரணிக்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், "இந்த விவாகரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை ஒரு சாதாரண மனிதன் பேசியிருந்தால் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள் நடக்கும் என்று ஓர் உள்துறை அமைச்சர் பேசக்கூடாது. அவர் நாட்டின் உள்துறை அமைச்சர், பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் அல்ல. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளது. அங்கு புகார் அளித்த பின்னர், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தோம்" என்றார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும், கட்சியின் கர்நாடக தேர்தல் பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா, "நாங்கள் ஒரு முக்கியமான விஷயம் தொடர்பாக ஹைகிரவுண்ட் காவல் நிலையம் வந்தோம். நாங்கள் இங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது புகார் அளித்துள்ளோம். அவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 ஏ (மொழி, வசிப்பிடம், பிறந்த இடம், இனம், மதம் தொடர்பாக இரண்டு குழுக்களுக்கிடையே பகையைத் தூண்டுவது), 171 ஜி (தேர்தல் தொடர்பாக பொய்யான தகவல்களைத் தெரிவிப்பது), 505(2)(வகுப்புகளுக்கு இடையே பகை மற்றும் வெறுப்பைத் தூண்டும் விதமாக பேசுவது) மற்றும் 123 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
மாநிலத்தில் பிஎஃப்ஐ இயக்கத்தைத் தடை செய்யும்படி டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் ஏற்கெனவே கோரிக்கை வைத்தனர். முதல்வர் பசவராஜ் பொம்மை அப்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தத் தேர்தலில் பாஜக 40-க்கும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெறும் என்பதால் அவர்களுக்கு பதற்றம் ஏற்பட்டுவிட்டது. அதனால் உண்மைக்குப் புறம்பானவற்றை பேசி வருகின்றனர்" என்றார்.
முன்னதாக, "கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அங்கு ஊழலும், வாரிசு அரசியலும், வன்முறைகளும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். கர்நாடக மாநிலத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்து பேசிய அமித் ஷா,"வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கர்நாடகா மாநிலத்தின் வளர்ச்சி ரிவர்ஸ் கியரில் செல்லும். எனவே அரசியல் ஸ்திரத்தன்மை தரும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். புதிய கர்நாடகம் வேண்டுமென்றால் மக்கள் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு மாநில அரசால் ரத்து செய்யப்பட்டது ஒரு நல்ல முடிவே. நான் எப்போதுமே மதம் சார்ந்த இட ஒதுக்கீடுகளை ஊக்குவித்ததில்லை. ஆனால் காங்கிரஸ் அதை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கிறது. இதனால் யாருடைய இட ஒதுக்கீடு பறிபோகும் என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். வொக்கலிகர்கள், லிங்காயத்துகள், தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட வகுப்பினர் என யாருடைய இட ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்" என பேசியிருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago