13 லட்சம் தொழிலாளர்களுக்கு காப்பீடு, இலவச பேருந்து வசதி - விரைந்து அமல்படுத்த உத்தரவிட்ட டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெல்லியில் 13 லட்சம் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச பேருந்து பயண வசதிகள் விரைவில் அமலாக்கப்பட உள்ளன. அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தொழிலாளர் துறை கூட்டத்தில் இதற்கான உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் தொழிலாளர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், டெல்லி மாநில தொழிலாளர் துறை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இத்துறையில் சுமார் ரூ.4,000 கோடி வரை செலவு செய்யாமல் வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கேஜ்ரிவால் சுட்டிக் காட்டினார். இந்த தொகை, டெல்லியின் ஒவ்வொரு தொழிலாளரையும் சென்றடையும் வகையில் திட்டங்கள் அமைக்கவில்லை என்ற அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தினார்.

எனவே இந்த தொகையில் டெல்லியின் 13 லட்சம் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் அவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறு முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மேலும் பேசுகையில், "டெல்லியின் தொழிலாளர்களுக்கு வெறும் 400-500 மனுக்களின் அடிப்படையில் மட்டும் பலன் அளிப்பது ஒரு அர்த்தமற்ற செயல்.

இந்த துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் 3,000 முதல் 4,000 கோடி ரூபாய் வரை செலவாகாமல் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் டெல்லியின் 13 லட்சம் தொழிலாளர்களுக்கும் பல்வேறு வகை பலன்கள் அளிக்கப்பட வேண்டும்.

முதியோருக்கு ஓய்வூதியம்: வரும் ஜூன் மாதத்திற்கு முன்பாக இத்துறையின் அதிகாரிகள் வருவாய் துறையினருடன் இணைந்து டெல்லி தொழிலாளர்கள் அனைவரையும் பதிவு செய்ய வைக்க வேண்டும்.

இன்னும், ஒருவாரத்திற்குள் டெல்லியில் 60வயதிற்கும் அதிகமான தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும். அவர்களது செல்போன் எண்களை கண்டறிந்து குறுந்தகவல்கள் மூலம் தொழிலாளர் துறையின் பலன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

டெல்லியில் தொழிலாளர்களுக் காக தள்ளுபடி மானிய விலையில் அடுக்கு மாடி வீடுகள் அளிக்கப்படுகின்றன. இதேபோல், டெல்லியை சுற்றியுள்ள பலமாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு தற்காலிக தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. இத்துடன், கட்டிடம், பைப்புகள், மின்சாரம், கார் பழுது தொழிலுக்கான உபகரணங்கள் இலவசமாக அளிக்கும் திட்டங்களும் அமலில் உள்ளன.

இலவச கல்வி: மேலும், இந்தவகை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, குழந்தை காப்பக வசதியையும் டெல்லி அரசு அமைத்துள்ளது. கரோனா பரவல் காலத்தில் அமலான இதுபோன்ற வசதிகள் இன்னும் கூட தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE