”கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊழல் மிகும், கலவரம் நடக்கும்” - அமித் ஷா

By செய்திப்பிரிவு

பெங்களூரு: "கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அங்கு ஊழலும், வாரிசு அரசியலும், வன்முறைகளும் முன் எப்போதும் இலலாத அளவுக்கு அதிகரிக்கும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கும் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள டெர்டால் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கர்நாடகா மாநிலத்தின் வளர்ச்சி ரிவர்ஸ் கியரில் செல்லும். எனவே அரசியல் ஸ்திரத்தன்மை தரும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். புதிய கர்நாடகம் வேண்டுமென்றால் மக்கள் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் நீங்கள் தேர்வு செய்யப்போவது வெறும் வேட்பாளர்களை மட்டும் அல்ல கர்நாடகாவின் எதிர்காலத்தைத் தேர்வு செய்யப் போகிறீர்கள். நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் கர்நாடகாவில் எதிர்காலம் பிரதமர் மோடியின் வசம் செல்லும். கர்நாடகாவில் அரசியல் ஸ்திரத்தன்மையையும், வளர்ச்சியையும் கொண்டுவர பாஜகவுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

தொடர்ந்து பாகல்கோட்டில் பிரச்சாரம் செய்த அமித் ஷா, "லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர், லக்‌ஷமண் சாவடி பாஜகவிலிருந்து காங்கிரஸுக்கு சென்றது அந்தக் கட்சிக்கு எவ்விதத்திலும் பலனளிக்கப் போவதில்லை.

காங்கிரஸ் எப்போதுமே லிங்காயத் சமூகத்தை அவமதித்துள்ளது. எத்தனையோ ஆண்டுகள் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தும்கூட எஸ்.நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல் என இரண்டு முதல்வர்கள் மட்டுமே காங்கிரஸ் சார்பில் லிங்காயத் சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படனர்.

ஆனால் இப்போது ஜெகதீஷ் ஷெட்டர், லக்‌ஷ்மண் சாவடியை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கின்றனர். எதிர்க்கட்சியிலிருந்து வந்தவர்களை வைத்து வாக்கு சேகரிப்பதே காங்கிரஸ் கட்சியில் அடையாள முகங்கள் இல்லாத வெற்றிடத்தைக் காட்டுகிறது.

முன்னர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோத்தது. ஆனால் அதன் பின்னர் அக்கட்சிக்குப் போக்கு காட்டியது. இதையெல்லாம் கர்நாடகா மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அதேபோல் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு மாநில அரசால் ரத்து செய்யப்பட்டது ஒரு நல்ல முடிவே. நான் எப்போதுமே மதம் சார்ந்த இட ஒதுக்கீடுகளை ஊக்குவித்ததில்லை. ஆனால் காங்கிரஸ் அதை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கிறது. இதனால் யாருடைய இட ஒதுக்கீடு பறிபோகும் என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். வொக்கலிகர்கள், லிங்காயத்துகள், தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட வகுப்பினர் என யாருடைய இட ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும் " என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE