2024 மக்களவை தேர்தல் தாக்கம் | உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் உள்ளாட்சி தேர்தல் மே 4 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 2024 இன் மக்களவை தேர்தல் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

உ.பி.,யில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி நிலவுகிறது. இங்கு இதர மாநிலங்களை விட அதிகமாக முஸ்லிம்கள் எண்ணிக்கை சுமார் 24 சதவிகிதம் உள்ளனர். இவர்களது வாக்குகளால் உ.பி.,யின் பல சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. எனினும், ஒவ்வொரு தேர்தலிலும் பிளவுபடும் முஸ்லிம் வாக்குகளால் பாஜகவின் வெற்றி சாதகமாகிறது.

2024 இல் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் முஸ்லிம் வாக்குகளின் பிளவு குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாஜக நேரடியாக முஸ்லிம்களை கவரும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், உ.பி., உள்ளாட்சி தேர்தலின் அனைத்து அரசியல் கட்சிகளும் தனது வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. இது, 2024 மக்களவை தேர்தலின் தாக்கமாகக் கருதப்படுகிறது.

இதுவரையும் முஸ்லிம்களை பெரிதாகக் கருதாத பாஜக முதல்கட்ட தேர்தலில் சுமார் 200 முஸ்லிம்களை போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் கூட உள்ளன.

பிரயாக்ராஜ், வாரணாசி, கான்பூர், கோரக்பூர், லக்னோ, ஜான்சி, ஆக்ரா மற்றும் பெரோஸாபாத் ஆகிய மாவட்டங்களில் பாஜகவில் அதிக முஸ்லிம்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் பாஸ்மந்தா மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களாக உள்ளனர்.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உ.பி., பாஜக சிறுபான்மை பிரிவின் முக்கியத் தலைவரான குன்வார் பாசித் அலி கூறும்போது, ‘கடந்த தேர்தலில் சுமார் 100 முஸ்லிம்கள் பாஜகவில் போட்டியிட்டனர். இந்த எண்ணிக்கை 2023 உள்ளாட்சி தேர்தலில் நானூறையும் தாண்டும். உபியில் பாஸ்மந்தா உள்ளிட்ட சில முக்கியப் பிரிவின் முஸ்லிம்கள் பாஜகவிற்கு ஆதரவளிப்பது அதன் காரணம்.’ எனத் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் வாக்குகளை தன் பக்கம் அதிகம் வைத்துள்ள சமாஜ்வாதி இந்த முறை உயர் சமூகத்தினரை குறி வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. எனினும், கடந்த தேர்தலை விட அதிகமாக சமாஜ்வாதியும் இந்த முறை வாய்ப்பளித்துள்ளது.

முன்னாள் முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கடந்த தேர்தலை விட அதிகமாக முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளை விட அதிக எண்ணிக்கையில் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

உதாரணமாக, உ.பி.,யில் மொத்தம் உள்ள 17 முனிசிபல் நகராட்சி தலைவர் பதவியில் மட்டும், சமாஜ்வாதி 4, மாயாவதியின் பகுஜன் சமாஜ் 10 மற்றும் காங்கிரஸ் 11 முஸ்லிம் வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளன.

உ.பி.,யில் முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் கட்சி எனப் பெயர் எடுத்துள்ள அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லிமின் கட்சி போட்டியில் உள்ளது. இதன் தலைவரான ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி, தன் கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்களாக முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். இந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் மே 13ல் வெளியாகவுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE