ரூ.41 கோடி நன்கொடை பெற்று மாநில கட்சிகளில் பிஆர்எஸ் முதலிடம்!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாநில கட்சிகளில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சி 2021-22-ம் நிதியாண்டில் ரூ.41 கோடி நன்கொடை பெற்று முதலிடத்தில் உள்ளது.

அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த அறிக்கையை, தேர்தல் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்காக செயல்படும் ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பு (ஏடிஆர்) மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி கடந்த நிதியாண்டில் ரூ.41 கோடி நன்கொடை வசூலித்து முதல் இடத்தில் உள்ளது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ரூ.38.24 கோடி வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐ்க்கிய ஜனதா தளம் கட்சி ரூ.33.25 கோடி நன்கொடை வசூலித்துள்ளது.

நாட்டில் உள்ள 26 மாநில கட்சிகள் மொத்தம் 5,100 நன் கொடைகள் மூலம் ரூ.189.80 கோடி நிதி பெற்றுள்ளன. இவற்றில் ரூ.20,000-க்கு மேற்பட்ட மற்றும் அதற்கு கீழான நன்கொடைகளும் அடங்கும். சமாஜ்வாதி கட்சி ரூ.29.79 கோடி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதிமுக, பாமக, பிஜூ ஜனதா தளம், என்டிபிபி, சிக்கிம் ஜனநாயக முன்னணி, பார்வர்டு பிளாக், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு காட்சிகள் நன்கொடை விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. 54 மாநில கட்சிகளில் 33 கட்சிகள் நன்கொடை விவரங்களை மட்டுமே ஏடிஆர் ஆய்வு செய்தது. 19 கட்சிகள் தங்கள் நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் குறித்த காலத்துக்குள் தெரிவிக்கவில்லை.

ரூ.162.21 கோடி மதிப்பிலான நன்கொடையை அதாவது 85.46 சதவீதத்தை பிஆர்எஸ், ஆம்ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெற்றுள்ளன. இந்த கட்சிகளில் ஐக்கிய ஜனதா தளம் தவிர மற்ற கட்சிகள், தங்களின் நன்கொடை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.

மொத்தம் ரூ.189.80 கோடி நன்கொடையை ரொக்கமாக பெற்றதாக அரசியல் கட்சிகள் தெரிவித்தன. அதிக தொகை அதாவது ரூ.5.55 லட்சம் நன்கொடை பெற்றதாக தெரிவித்துள்ள ஒரே மாநிலம் தமிழகம். அடுத்ததாக ரூ.5,000 நன்கொடை ரொக்கமாக பெற்றதாக அருணாச்சல் தெரிவித்துள்ளது. பெரும்பாலான நன்கொடையை ரொக்கமாக பெற்றதாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

டெல்லியிலிருந்து மிக அதிக அளவில் ரூ.118.17 கோடி நன் கொடை பெறப்பட்டுள்ளது என மாநில கட்சிகள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE