குனோ தேசிய பூங்காவில் உதய் சிவிங்கிப் புலி உயிரிழப்பு - மன அழுத்த பாதிப்பு காரணமா?

By செய்திப்பிரிவு

போபால்: உதய் என்னும் சிவிங்கிப் புலி உயிரிழந்த நிலையில், குனோ தேசிய பூங்காவில் ஒரே மாதத்தில் இரண்டு சிவிங்கிப் புலிகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள், சிறப்பு சரக்கு விமானம் மூலம் இந்தியாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்டன. அவற்றை மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிலையில், மேலும் சில சிவிங்கிப் புலிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்டன. மொத்தம் இவ்வாறு ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன.

இவற்றில் 6 வயதான உதய் என்ற சிவிங்கி புலி உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. இது குறித்து வன நிர்வாகம் தரப்பில் கூறும்போது, “உதய் வழக்கத்துக்கு மாறாக சோர்வாக இருந்தது. இதனைத் தொடர்ந்து உதய்யை பரிசோதித்த மருத்துவர்கள் அதனை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், சிகிச்சையின்போது உதய் சிவங்கிப் புலி உயிரிழந்துள்ளது. உதய்யின் இறப்புக்கான முழு விவரம் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்றனர்.

இந்த நிலையில், உதய் நீண்டகால மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்ததாக தென்னாப்பிரிக்க சிறுத்தை வல்லுநர் வின்சென்ட் வான் டெர் மெர்வே கூறியுள்ளார். மெர்வே இடமாற்றத்திற்காக சிறுத்தைகளைப் பிடிக்கும் பணியை நீண்ட காலமாக செய்து வருகிறார்.

உதய்யின் மரணம் குறித்து மெர்வே மேலும் கூறும்போது, “அங்குள்ள பிற சிவிங்கிப் புலிகளை போன்று உதய்யும் காடுகளில் வாழும் சிவங்கிப் புலிதான். சிறை பிடிப்பதற்கு முன் உதய் ஆரோக்கியமாகத்தான் இருந்ததது. அதன்பிறகுதான் அதற்கு மன அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிவிங்கிப் புலிகள் காடுகளில் விடப்பட வேண்டும். அவற்றை குகைகளில் அடைக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

முன்னதாக, நைபீயாவிலிருந்து கொண்டு வந்த 8 சிவிங்கி புலிகளில் சாஷா என்ற சிவங்கிப் புலி உடல் நலக்குறைவால் இம்மாத தொடக்கத்தில் உயிரிழந்தது. இந்த நிலையில் ஒரே மாதத்தில் இரண்டு சிவங்கிப் புலிகள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE