சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டன: தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ரேவா: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய பிரதேசத்தின் ரேவா நகரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பல்வேறு நலத் திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். ஏராளமான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்ததிட்டங்களின் மதிப்பு ரூ.17,000 கோடி ஆகும்.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக வேண்டும் என்ற லட்சியத்தை முன்னிறுத்தி இரவு, பகலாக உழைத்து வருகிறோம். நாடு வளர்ச்சி அடைய, கிராமங்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டன.

மத்தியில் தற்போது ஆளும் பாஜக அரசு உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த 2014-க்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஆயோக் மானியம் ரூ.70,000 கோடிக்கும் குறைவாக இருந்தது. இவ்வளவு சிறிய தொகையை வைத்து உள்ளாட்சி அமைப்புகளால் எவ்வாறு திறம்பட செயல்பட முடியும்? மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் ரூ.70,000 கோடியில் இருந்து ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது.

கிராமங்களில் டிஜிட்டல் புரட்சி

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்று தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறினார். அவரது கொள்கையை காங்கிரஸ் புறக்கணித்தது. அந்தக் கட்சி ஆட்சி நடத்தியபோது உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படவில்லை. காங்கிரஸ் அரசு ஒதுக்கிய சொற்ப தொகையையும் இடைத்தரகர்கள் சுருட்டினர்.

மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கு முதலிடம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து வருகிறது. தற்போது நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டிருக்கிறது.

முந்தைய அரசுகள் கிராமங்களுக்கு பணம் செலவழிப்பதை தவிர்த்து வந்தன. வாக்கு வங்கி இல்லாததால் கிராமங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன. கிராம மக்களைப் பிரித்து அப்போதைய ஆளும் கட்சி அரசியல் ஆதாயம் தேடி வந்தது. இந்த அநீதிக்கு பாஜக அரசு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. கிராமங்களில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த நீர்ப்பாசனத் திட்டங்களை முடிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.

இயற்கை வேளாண்மை

பூமி நமது தாய். அந்த தாய்க்கு தீமை விளைவிக்கக்கூடாது. இதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து வருகிறோம். ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை வேளாண்மைக்கு மாற விவசாயிகளிடம் உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கொச்சியில் பேரணி, இளைஞர் திருவிழா

மத்திய பிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் கேரளாவின் கொச்சிக்கு நேற்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடி சென்றார். ஐஎன்எஸ் கருடா விமான தளத்தில் கேரள பாரம்பரிய உடையில் தரையிறங்கிய அவர், சேக்ரட் ஹார்ட் கல்லூரி வரை நடந்து சென்றார். சுமார் 1.8 கி.மீ. தொலைவு வரை நடந்து சென்ற பிரதமர் மோடியை சாலையின் இருபுறமும் குவிந்திருந்த மக்கள் மலர் தூவி வரவேற்றனர். சேக்ரட் ஹார்ட் கல்லூரி மைதானத்தில் "யுவம் 23” என்ற பெயரில் நடைபெற்ற இளைஞர் திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். இதன் பிறகு கொச்சியில் உள்ள தாஜ் மலபார் நட்சத்திர ஓட்டலில் நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடி தங்கினார். அப்போது பல்வேறு கிறிஸ்தவ சபைகளை சேர்ந்த மதத் தலைவர்கள் அவரை சந்தித்துப் பேசினர்.

கொச்சியில் இருந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கு செல்கிறார். அங்கு வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் ரூ.3,200 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி, அடிக்கல் நாட்டுகிறார். அப்போது கொச்சி நீர்வழி மெட்ரோ சேவையை அவர் தொடங்கி வைக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE