கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பு வேட்புமனுக்கள் வாபஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பிலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் பாஜக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டிருந்தனர். அதற்காக, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை பழனிசாமி சார்பில் தம்பிதுரை எம்.பி. சந்தித்து, கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பழனிசாமியின் விருப்பத்தை தெரிவித்தார்.

அதேபோல, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வா.புகழேந்தி, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து, தேர்தலில் போட்டியிடுவது குறித்த பன்னீர்செல்வத்தின் விருப்பத்தை தெரிவித்தார்.

இரு தரப்பினருக்கும் பாஜக ஆதரவு தெரிவிக்காத நிலையில், அதிமுக சார்பில் பழனிசாமி தரப்பில் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளராக அன்பரசன் அறிவிக்கப்பட்டார். அதேபோல, பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக வேட்பாளர்களாக புலிகேசி நகரில் நெடுஞ்செழியன், காந்தி நகர் தொகுதியில் கே.குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜ் ஆகியோர் நிறுத்தப்பட்டனர். 4 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில், நெடுஞ்செழியனின் வேட்புமனுவை தவிர, மற்ற 3 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

இந்நிலையில், ‘‘குறைவான வாக்குகளை பெற்று அதிமுகவுக்கு அவமானத்தை ஏற்படுத்த விரும்பவில்லை’’ என்று கூறி, காந்தி நகர், கோலார் தங்கவயல் ஆகிய தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதாக பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த புகழேந்தி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, பழனிசாமி தரப்பு வேட்பாளரும் தனது வேட்புமனுவை நேற்று திரும்ப பெற்றுள்ளார். இதுதொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை, பாஜகவின் மேலிட பொறுப்பாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள டி.அன்பரசனின் வேட்புமனுவை திரும்ப பெறுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க அன்பரசன் தனது வேட்புமனுவை திரும்ப பெற்றுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE