ஊடகங்களுக்கு நீதிபதிகள் பேட்டி அளிக்க கூடாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான வழக்கில் முதல்வர் மம்தாவின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜிக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், அபிஷேக்கின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அபிஷேக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘‘ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங் கோபாத்யாயா ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். இது சட்ட விதிமீறல்’’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி நரசிம்மா கூறும்போது, ‘‘நீதிபதி ஊடகத்துக்கு பேட்டி அளித்தது உண்மையா என்பது குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்ற பதிவாளர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

அன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக நீதிபதிகள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது’’ என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE