நேர்மை, உறுதிக்குப் பெயர் பெற்ற மிஸ்ரா பிரதமரின் முதன்மைச் செயலாளர் ஆன பின்னணி

By ஆர்.ஷபிமுன்னா

பிரதமர் நரேந்திர மோடி, 69 வயதான நிருபேந்திர மிஸ்ராவை தனது முதன்மைச் செயலாளராக அமர்த்த சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளார். இதற்கு மிஸ்ராவின் நேர்மை மற்றும் உறுதியான முடிவுகளை எடுக்கும் தன்மை முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

நாட்டின் புதிய பிரதமராகப் பதவி ஏற்ற மோடி, நிருபேந்திர மிஸ்ராவை தனது முதன்மைச் செயலாளராக அமர்த்தினார். இவர் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவராக 2009-ல் ஓய்வு பெற்றவர். ஒரு நீதிபதிக்கு இணையாக இந்தப் பதவி கருதப்படுகிறது.

டிராய் சட்டப்படி அதன் தலைவர்கள் ஓய்வு பெற்றபின் மத்திய, மாநில அரசுகள் மற்றும் வணிக ரீதியான தனியார் நிறுவனங்களில் பணியாற்றக் கூடாது. நிருபேந்திர மிஸ்ராவுக்காக இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்து நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய அரசின் அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது: ‘நேர்மையான அதிகாரியான மிஸ்ரா, உறுதியான முடிவுகள் எடுப்பதற்கு பெயர் போனவர். இதற்கு உதாரணமாக 2ஜி அலைக்கற்றை வழக்கில் நீதிமன்றத்தில் தைரியமாக மிஸ்ரா அளித்த மிக முக்கிய சாட்சியத்தைக் கூறலாம். இத்துடன் அவருக்கு இருக்கும் உத்தரப் பிரதேச தொடர்புகளும் பிரதமருடன் இணைய முக்கிய காரணம்’ எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.

மத்திய, மாநில அரசுகளின் அனைத்து துறைகளிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் மிஸ்ரா. இதுவரை அவர் எந்த ஒரு புகாரிலும் சிக்கியது இல்லை. இதுதான் அவர் பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கான முக்கியக் காரணங்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிரதமருக்கும், மத்திய துறைகளின் அதிகாரிகளுக்கும் இடையே பாலமாக இருப்பது மிஸ்ரா ஏற்றுள்ள முதன்மைச் செயலாளர் பதவி ஆகும். இதில் தமக்கும் கட்சிக்கும் வேண்டியவர்களை பிரதமர்கள் அமர்த்திக் கொள்வது வழக்கம். இந்த வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தனது முதன்மைச் செயலாளராக டி.கே.ஏ.நாயரை நியமித்தார். அவருக்கு அடுத்தபடியாக புலோக் சட்டர்ஜி முதன்மைச் செயலாளராகப் பணியாற்றினார். இருவருமே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நெருக்கமானவர்கள்.

இப்போது பிரதமரின் முதன்மைச் செயலாளராகப் பொறுப் பேற்றிருக்கும் நிருபேந்திர மிஸ்ரா அலகாபாத் பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர் ஆவார். 1967 வருட ஐஏஎஸ் முடித்தவர், உத்தரப் பிரதேச மாநிலப் பிரிவு அதிகாரியானார். உத்தரப் பிரதேசத்தின் முதல்வர்களாக இருந்த கல்யாண் சிங், ராஜ்நாத் சிங் மற்றும் முலாயம் சிங் ஆகியோரிடம் முதன்மை செயலாளராகப் பணியாற்றிய பின், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய அரசுப் பணிகளை ஏற்றார். இதனால் குஜராத் முதல்வராக இருந்த மோடியுடனும் நேரடியான அறிமுகம் இருந்தது. மிஸ்ராவை முதன்மைச் செயலாளராக நியமிக்க மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கைலாஷ் மிஸ்ரா ஆகியோர் சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது.

மோடியின் முதன்மைச் செயலாளராக கடந்த மே 28-ல் நியமிக்கப்பட்ட மிஸ்ராவுக்காக அதேநாளில் டிராய் தலைவர் பதவிக்கான விதிகளில் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதுபோல் ஒரு அதிகாரியின் நியமனத்துக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆட்சியில் உணவுப் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக கொண்டு வந்தபோது எதற்கு எடுத்தாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவசர சட்டம் கொண்டு வருவதாக பாஜக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்