இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக போராட்டம் - காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி இந்திய மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதையடுத்து இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர், பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர்கள், ''பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். இதை வலியுறுத்துவதற்காகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். அனைத்துத் தரப்பில் இருந்தும் ஆதரவை திரட்டுவோம்.

மூன்று மாதங்களுக்கு முன்பு நாங்கள் எங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டது நாங்கள் செய்த தவறு. அப்போது மத்தியஸ்த முயற்சியை நாங்கள் ஏற்றோம். இம்முறை ஏற்க மாட்டோம். எங்களை யாரும் ஏமாற்ற விட மாட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும். அரசாங்கம் ஏன் அமைதியாக இருக்கிறது என்று நீங்கள்(பத்திரிகையாளர்கள்) கேட்க வேண்டும். நாங்கள் நாட்டிற்காக பதக்கங்களை வெல்லும்போது, ​​நாங்கள் பாராட்டப்படுகிறோம். இப்போது எங்கள் கோரிக்கைகளுடன் நாங்கள் சாலையில் இருக்கிறோம், யாரும் கவலைப்படுவதில்லை" என வேதனை தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE