இரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் எம்.பி., எம்எல்ஏ தேர்தலில் சீட் வழங்கக் கூடாது: அஜித் பவார் யோசனை

By செய்திப்பிரிவு

புனே: ”தேசத்தின் வளர்ச்சிக்காக எல்லோரும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள எம்.பி., எம்எல்ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களக அறிவிக்க வேண்டும்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் மகாராஷ்டிர சட்டப்பேரவை எத்ரிக்கட்சித் தலைவருமான அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் தொகை நிலை - 2023 அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் அண்மையில் வெளியிட்டது. அதில், "மக்கள் தொகையில் இந்தியா இந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளும். இந்த ஆண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை 142.86 கோடியாக இருக்கும். அதேநேரத்தில், சீன மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கும். மூன்றாம் இடத்தில் இருக்கும் அமெரிக்க மக்கள் தொகை 34 கோடியாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் பாராமதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அஜித் பவார், "இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் சீனாவை விஞ்சும் என்று கூறப்பட்டுள்ளது. என் தாத்தா என்னிடம் மக்கள் தொகை பற்றிச் சொல்லும்போது இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 35 கோடி. இப்போது வெகு விரைவில் இந்திய மக்கள் தொகை 142 கோடி கோடி ஆகவுள்ளது. அதற்கு நாம் அனைவரும்தான் காரணம்.

இனி அனைவருமே தேசத்தின் நலன் கருதி ஒன்று அல்லது இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளுமே இதனை முக்கியமான விவகாரமாகக் கருத வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கக்கூடாது. இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடானால் அது நமக்கு ஒரு வரமாக இருப்பதைவிட சாபமாகவே இருக்கும்.

அதனால்தான் விலாஸ்ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது நாங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவோருக்கு மூன்று குழந்தைகள் இருந்தால் சீட் வழங்கமாட்டோம். அதேபோன்ற முடிவை இனி எம்.பி.., எம்எல்ஏ.,க்கள் தேர்தலிலும் அறிவிக்க வேண்டும். இது மத்திய அரசின் கைகளிலேயே உள்ளது. அதனால் நாங்கள் இவ்விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். சலுகைகள் மறுக்கப்படும் போது மக்களுக்கு உடனடியாக விழிப்புணர்வு ஏற்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE