நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ சேவை: பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் நாளை தொடங்கி வைக்கிறார்

By செய்திப்பிரிவு

கொச்சி: நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி கேரளாவின் கொச்சி நகரில் நாளை தொடங்கி வைக்கிறார்.

கேரளாவின் துறைமுக நகரான கொச்சியில் 2021 பிப்ரவரியில் ரூ.1,137 கோடியில் நீர்வழி மெட்ரோ திட்டம் தொடங்கப்பட்டது. கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் வகையில் 76 கி.மீ. தொலைவுக்கு 15 நீர் வழித் தடங்களில் மெட்ரோ சேவைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பத்து தீவுகளில் 38 நீர்வழி மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக 78 படகுகள், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு படகிலும் 50 இருக்கைகள் உள்ளன. ஒரு படகில் 100 பயணிகள் செல்ல முடியும். குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தவிர நீர்வழி மெட்ரோ சேவையால் கொச்சி மற்றும் சுற்று வட்டார தீவுகளை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கொச்சி நீர்வழி மெட்ரோவின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது: நாட்டில் முதல் முறையாக கொச்சியில் நீர்வழி மெட்ரோ சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த சேவையில் 78 படகுகள் பயன்படுத்தப்பட உள்ளன. குறைந்தபட்சம் மணிக்கு 18 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சமாக 23 கி.மீ. வேகத்திலும் படகுகள் இயக்கப்படும். அனைத்து படகுகளிலும் குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது கொச்சியில் இருந்து எர்ணாகுளம் செல்வதற்கு 45 நிமிடங்கள் ஆகின்றன. நீர்வழி மெட்ரோ மூலம் 15 நிமிடங்களில் கொச்சியில் இருந்து எர்ணாகுளம் சென்றடையலாம்.

கொச்சியில் நீர்வழி மெட்ரோ திட்டம் வெற்றி பெற்றால் கேரளா முழுவதும் நீர்வழித்தடங்களில் இதே திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதன்படி கொச்சி நீர்வழி மெட்ரோ சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE