பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த கொச்சியை சேர்ந்தவர் கைது

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி காவல் துறை ஆணையர் கே.சேது ராமன் நேற்று கூறியுள்ளதாவது: பிரதமர் கேரளா வரவுள்ள நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து பாஜக அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் கொச்சியைச் சேர்ந்த சேவியர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட பகை காரணமாக அவர் வேறு ஒருவர் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரிய வந்தது. பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான கண்காணிப்பு பணிகளில் 2,060-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் சாலைப்பேரணியில் 15,000 பேரும், யுவம்-23 நிகழ்ச்சியில் 20,000 பேரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யுவம்-23 பங்கேற்பாளர்கள்மொபைல் போன் மட்டுமே எடுத்துவர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சேது ராமன் தெரிவித்தார்.

கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடக்கி வைக்கிறார். முன்னதாக, பிரதமரின் வருகை குறித்து பேசிய அம்மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் "சாலை பேரணியில் பிரதமர் பங்கேற்பதுடன், கூட் டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றுவார்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE