செம்மொழி நிறுவனத்துடன் அலிகர் பல்கலை. இணைந்து நடத்தும் தொல்காப்பியம் குறித்த சர்வதேசக் கருத்தரங்கு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தொல்காப்பியம் குறித்த சர்வதேசக் கருத்தரங்கை, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன்(சிஐசிடி) இணைந்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் (ஏஎம்யு) நடத்துகிறது. சிஐசிடியால் தமிழ் இலக்கியமான தொல்காப்பியம், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டதை அடுத்து இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையும் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன மொழிகள் பள்ளி, மொழிக்கல்வி மற்றும் மொழித் தொழில்நுட்பப் புலமும் இணைந்து வரும் ஏப்ரல் 25, 26 தேதிகளில் 2 நாட்களுக்கு இணையவழியில் ஒரு கருத்தரங்கு நடைபெற உள்ளது.

சர்வதேசக் கருத்தரங்கான இது,‘தொல்காப்பியம் மற்றும் செம்மொழித் தமிழ், வரலாற்றுடனான அதன் தொடர்பும்’ எனும் தலைப்பில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, 2 மத்திய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் ஏஎம்யுவின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சாந்தினிபீ மற்றும் சென்னையின் சிஐசிடியின் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தனித்தன்மை, தாய்மைத்தன்மை, உடன்கால இலக்கியங்களின் மீதான செல்வாக்கு, பிறமொழி இலக்கியங்களை உருவாக்குதல் எனும் செவ்விலக்கியக் கூறுகளைக் கொண்டிருக்கும் தொல்காப்பியத்தின் சிறப்பினையும் வளத்தினையும் உலகெங்கிலும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு இந்த 2 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 25 அன்று நடைபெறும் தொடக்க விழாவில், ஏஎம்யுவின் துணைவேந்தர் பேராசிரியர் முகமது குல்ரீஸ் தலைமையுரை ஆற்றுகிறார். சிஐசிடியின் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் வாழ்த்துரை வழங்கஉள்ளனர்.

கருத்தரங்க நோக்கவுரையினைக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சாந்தினிபீ வழங்குவார். ஏஎம்யுவின் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பேராசிரியர் நிஷாத் பாத்திமா பாராட்டுரை வழங்கவுள்ளனர். ஜெஃப்னா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையைச் சேர்ந்த மதிப்புறு பேராசிரியர் முனைவர் அ. சண்முகதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.

மலேசியா, ஜெர்மனி, இலங்கை, தான்சானியா ஆகிய உலக நாடுகளில் இருந்தும் தொல்காப்பிய அறிஞர்கள் உரையாற்ற உள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 12 பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தொல்காப்பியம் மற்றும் செம்மொழித்தமிழ், வரலாற்று உடனான அதன் தொடர்புகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளை வழங்க உள்ளனர்.

இக்கட்டுரைகளுள் சில பிறமொழிகளில் தொல்காப்பியம் கொண்டுள்ள ஒத்துணர்வு, மொழியாக்கம் செய்யப்படும்போது ஏற்பட்ட சிக்கல்கள், தீர்வுகள் குறித்தும், ஒருசில கட்டுரைகள் தொன்மைச் சிறப்புடைய தொல்காப்பியம் ஒருஇலக்கண நூலாக மட்டுமின்றி, தொல்சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் களஞ்சியமாகத் திகழ்வதையும் ஒரு இலக்கியக் கோட்பாடாக இலக்கண நூல் பரிமளிப்பதையும் விளக்குவதாக அமைந்துள்ளன.

இந்தக் கருத்தரங்க அமர்வுகள் தொல்காப்பிய ஆய்வுக்கும் இருமொழி ஒப்பீட்டிற்கும் பல ஆய்வுகளின் முன்னெடுப்புக்கும் வழிகோலுவதாக அமைக்கப்பெற்றுள்ளன.

இப்பன்னாட்டுக் கருத்தரங்கின் நிறைவுவிழா ஏப்ரல் 26-இல் நடைபெற உள்ளது. இதில், அலிகர் முஸ்ஸிம் பல்கலைக்கழகச் சமூக அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் மிர்சா அஸ்மர் பேக் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கஉள்ளார்.

ஏஎம்யுவின் இந்தித் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முகம்மது ஆசிக் அலி கவுரவ விருந்தினராகவும் பங்கேற்கிறார். சிஐசிடியின் பதிவாளர் முனைவர்ரெ.புவனேஸ்வரி வாழ்த்துரை வழங்க உள்ளனர். இந்த கருத்தரங்கின் மூலம், இந்தி மொழிபெயர்ப்பின் தொல்காப்பியம் பற்றிய விழிப்புணர்வு வட மாநிலக் கல்வியாளர்கள் இடையே பரவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE