கர்நாடகாவில் ‘இணைந்த கைகள்’ - சித்தராமையா + டி.கே.சிவக்குமார் வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே அமைதி நிலவுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் சனிக்கிழமை வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் சட்டைப் பையைச் சரிசெய்கிறார். பின்னர் இருவரும் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர். இந்த வீடியோவுடன் சேர்த்து, ‘ஒன்றாக இணைந்து நம்மால் வெற்றி பெற முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், கர்நாடகா காங்கிரஸின் இரண்டு தலைவர்களுக்குள் பூசல் இருப்பதாக ஊகங்கள் நிலவி வந்தன. காங்கிரஸின் எதிர்க்கட்சித் தலைவர், மாநில தலைவர் ஆகிய இருவருக்கும் இடையில் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி இருந்து ஊரறிந்த ரகசியமாகவே இருந்தது. இரண்டு தலைவர்களுமே தங்களின் முதல்வர் பதவி ஆசையினை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்தனர். சித்தராமையா சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘இந்த தேர்தல்தான் எனது கடைசி சட்டப்பேரவைத் தேர்தல்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்தமுறை ஆளும் பாஜக அரசின் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக ஊழல், வரலாற்றை திரித்தல், முறைகேடான நிர்வாகம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை பிரதான எதிர்க்கட்சி முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைமைகளுக்குள் நிலவி வரும் இந்த பிளவு, பாஜகவுக்கு சாதகமாக மாறிலாம் என விவரம் அறிந்தவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

கடந்த பிப்ரவரி மதம் இரண்டு காங்கிரஸ் தலைவர்களும் மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிக்கு தனித்தனியாக பேருந்து பயணம் மேற்கொண்டது கட்சிக்குள் நிலவிய பூசலை மேலும் உறுதிப்படுத்தியது. அதற்கு பின்னர், கட்சி மேலிடத்தில் இருந்து இருவரையும் அழைத்து பேசியதற்கு பின்னர் இருவரும் இணைந்து பேருந்து பயணம் செய்வது என்று முடிவு செய்தனர். இந்தப் பின்னணியில் காங்கிரஸ் தலைமை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE