பூமி தின செய்தி | நிலையான வளர்ச்சியை மேம்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இயற்கையோடு இயைந்து நிலையான வளர்ச்சியை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச பூமி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''நமது கிரகத்தை மேம்படுத்த உழைக்கும் அனைவரையும் இந்த பூமி தினத்தன்று பாராட்டுகிறேன். இயற்கையோடு இயைந்து வாழும் நமது கலாச்சாரத்திற்கு ஏற்ப நிலையான வளர்ச்சியை மேம்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்ரேஸ் வெளியிட்டுள்ள பூமி தின செய்தியில், ''பூமியைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும். இயற்கையுடன் இயைந்த திட்டங்களைச் செயல்படுத்துமாறு தலைவர்களை மக்கள் வலியுறுத்த வேண்டும். மக்களின் நலனுக்காகவும், கிரகத்தின் நலனுக்காகவும், வரும் தலைமுறையினரின் நலன்களுக்காகவும் நாம் அனைவரும் நம் அனைவருக்கும் பொதுவான இந்த வீட்டைப் பாதுகாக்க நமது பங்களிப்பை வழங்குவோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

''பூமி தினம் என்பது பூமி அன்னைக்கு நாம் நமது நன்றியைத் தெரிவிப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். பூமித் தாய் பல 100 கோடி ஆண்டுகளாக நம்மையும், பல்வேறு உயிரினங்களையும் வளர்த்து வருகிறார். நமது கிரகம் பல்லுயிர்த் தன்மையை செழிப்புடன் வைத்திருப்பதை உறுதி செய்ய நாம் அனைவரும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இதில் நாம் நமது உறுதிப்பாட்டை விரிவுபடுத்த வேண்டும்'' என பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

பூமி தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ''பூமியும் மண்ணும் உயிருள்ள பொருட்கள். பேரழிவின் விளிம்பில் இருந்து சுற்றுச்சூழலைக் காப்பதற்கு மனிதநேயத்துடன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இது நடக்கும்; நடக்கச் செய்வோம்'' என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE