கரோனா தொற்று அதிகரிப்பு: தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு அலர்ட்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து விழிப்புடன் இருக்குமாறு தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களை மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், உத்தரப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்ட்டிரா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தமிழகம், ஹரியாணா ஆகிய 8 மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ''கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேநேரத்தில் பீதி அடையத் தேவையில்லை.

கரோனா தொற்று உறுதியான மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். இன்ஃப்ளூயன்சா வகை நோய்கள் மற்றும் SARI நோய்கள் எந்த அளவுக்கு பரவுகின்றன என்பதை கண்காணியுங்கள்.

மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருங்கள். மருத்துவக் கட்டமைப்பு போதுமான அளவு உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள். தடுப்பூசி போடாமல் இருப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். கூட்டம் கூடாமல் இருப்பது, காற்றோட்ட வசதியை உறுதிப்படுத்துவது, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட கரோனா தடுப்புக்கான செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்'' என்று மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE