சூடானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டும் - அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சூடானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றுவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவத் தளபதி அப்தல் ஃபதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் பிரிவும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. இதுவரை அங்கு 330-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், சூடானில் சிக்கியிருக்கும் 3,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடற்படைத் தளபதி அஜித் குப்தா, எகிப்துக்கான இந்திய தூதர் வினய் மோகன் க்வத்ரா, இந்திய வெளியறவுத் துறை செயலாளர் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ''சூடானில் நிலவும் சூழல் குறித்து தொடர்ந்து கண்காணியுங்கள். அங்குள்ள இந்தியர்களுக்கு முடிந்த அனைத்து உதவிகளையும் அளியுங்கள். சூடானில் பாதுகாப்பாக இருப்பதற்கான வாய்ப்பு வேகமாக மாறி வருவதைக் கருத்தில் கொண்டு, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை தற்காலிகமாக பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான திட்டங்களை தயாரியுங்கள். இதில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்தும் ஆராயுங்கள். சூடானில் இருப்பதைப் போலவே அதன் அண்டை நாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் இந்தியர்கள் இருக்கிறார்கள். எனவே, அந்த நாடுகளையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்'' என தெரிவித்தார்.

சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, தண்ணீர், மருந்துகள், மின்சாரம் ஆகியவை கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த மோதலை அடுத்து தலைநகர் கார்டோமை விட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறிவிட்டனர். இந்த மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ஐநாவும், பல்வேறு உலக நாடுகளும் தொடர்ந்து முயன்று வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE