பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான இவருக்கு வயது 95. இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரகாஷ் சிங் பாதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரகாஷ் சிங் பாதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அவரது உடல்நிலை குறித்து அவரது மகனான சுக்பிர் சிங் பாதலிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி மூலம் விசாரித்தறிந்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அமித் ஷா, ''பிரகாஷ் சிங் பாதலின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்தும் அறிந்து கவலையடைந்தேன். அவரது உடல்நிலை குறித்து சுக்பிர் சிங் பாதலிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பிரகாஷ் சிங் பாதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE