ஜம்மு காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 7 பேருக்குத் தொடர்பு?

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 7 பேருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியான பிம்பர் காலி என்ற இடத்தில் இருந்து சங்கியோடி என்ற இடத்துக்கு ராணுவ வாகனத்தில் ராஷ்ட்ரீய ரைஃபில் படைப் பிரிவின் வீரர்கள் 6 பேர் சென்றுகொண்டிருந்தபோது அப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்தத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிம்பர் காலி பகுதியில் இருந்து ஏழாவது கிலோமீட்டரில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அந்தப் பகுதி அடர்த்தியான வனப் பகுதி என்றும் அங்கு பயங்கரவாதிகள் மறைந்திருந்து இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராக்கெட் மூலம் வீசக்கூடிய எறிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளனர். பூஞ்ச் - ரஜோரி பகுதியில் நிகழ்ந்த 4-வது சம்பவம் இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, அதன் ஒரு மாநாட்டை ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அடுத்த மாதம் நடத்த உள்ளது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீநகரில் நடக்க உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என பாகிஸ்தான் அரசு சீனாவை கேட்டுக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீநகரில் ஜி20 மாநாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்தத் தாக்குதலின் மூலம், மாநாட்டில் பங்கேற்க உள்ளவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதன்மூலம் ஸ்ரீநகருக்கு பதில் வேறு எங்காவது மாநாட்டை நடத்துவதற்கான அழுத்தத்தை இந்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருக்கலாம் என ரகசியத் தகவல்களை மேற்கோள்காட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE