அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய விமானப் படை கமாண்டர்களின் 3 நாள் மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இம்மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பங்கேற்கவிருந்தார். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் அதற்கான பரிசோதனை செய்துகொண்டார்.

இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்ததாகவும் ஓய்வு எடுக்குமாறு ஆலோசனை வழங்கியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

12,591 பேருக்கு பாதிப்பு

நாட்டில் கரோனா பரவல் தொடர்பான புள்ளிவிவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலையில் புதுப்பித்தது. இதன்படி நாட்டில் புதிதாக 12,591பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சுமார் 8 மாதங்களில் இது மிக அதிகம் ஆகும். புதிதாக 40 உயிரிழப்பு பதிவாகிய நிலையில் மொத்த உயிரிழப்பு 5,31,230 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 65,286 ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE