புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களில் ரேஷன் அட்டை வழங்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர், அஞ்சலி பரத்வாஜ், ஜெகதீப் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.

"புலம்பெயர் தொழிலாளர்களின் முழுவிவரங்களை தொகுக்கும் வகையில் புதிய இணையதளம் தொடங்கப்பட வேண்டும். உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் அனைவருக்கும் உணவு தானியங்கள் வழங்கப்பட வேண்டும். அந்தந்த மாநில அரசுகள் அவர்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி மத்திய தொழிலாளர் நலத் துறை சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் இ-ஷ்ரம் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. கடந்த மார்ச் மாத புள்ளிவிவரத்தின்படி இ-ஷ்ரம் இணையத்தில் 28.51 கோடி புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு இ-ஷ்ரம் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் விபத்துக் காப்பீடு உட்பட பல்வேறு திட்டங்களின் பலன்களை புலம்பெயர் தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர்.

இந்த சூழலில் சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர், அஞ்சலி பரத்வாஜ், ஜெகதீப் ஆகியோர் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுக்களை தாக்கல் செய்தனர். புலம்பெயர் தொழிலாளர்களில் சுமார் 10 கோடி பேர் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் பலன்களை அடையவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மாநில அரசுகள் முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றுஅவர்கள் மனுவில் கோரி உள்ளனர்.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அஹ்சானுதீன் அமானுல்லா அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறும்போது, “புலம்பெயர் தொழிலாளர்களில் சுமார் 10 கோடி பேர் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட பலன்களை பெறவில்லை. அவர்களுக்கும் முழுப் பலன்கள் கிடைக்க வேண்டும்" என்று கோரினார்.

மத்திய, மாநில அரசுகள் அளித்த விளக்கத்தில், “அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும்உணவுப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட அனைத்து திட்ட பலன்களும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எம்.ஆர்.ஷா,அஷானுதீன் அமனுல்லா அம்ரவு கூறியதாவது:

இ-ஷ்ரம் இணையத்தில் பதிவு செய்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். விடுபட்டவர்களுக்கு அடுத்த 3 மாதங்களில் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசஅரசுகள் ரேஷன் அட்டைகளை வழங்க வேண்டும். இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உத்தரவிட வேண்டும்.

ரேஷன் அட்டை மூலம் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அனைத்து சலுகைகளும் புலம்பெயர் தொழிலாளர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட பலன்களும் அவர்களை சென்றடைய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அஷானுதீன் அமனுல்லா உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE