தன்பாலினத்தவரின் 'திருமணம் போன்ற உறவுகள்' குறித்து நாங்கள் முன்பே சிந்தித்தோம்: உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தன்பாலினத்தவர் இடையேயான 'திருமணம் போன்ற நிலையான உறவுகளை' நாங்கள் முன்பே சிந்தித்தோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது தன்பாலின உறவு கிரிமினல் குற்றமாகாது என்று சட்டப்பிரிவு 377-ஐ நீக்கியபோதே அவர்களுக்கு இடையேயான நிலையான உறவு பற்றியும் சிந்தித்ததாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவ.25-ம் தேதி இரண்டு தன்பாலின திருமண தம்பதிகள் தங்களின் திருமண உரிமையை சட்ட ரீதியாக அங்கீகரிக்க கோரி தனித்தனியாக மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்கள் மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3-வது நாளாக இன்றும் (ஏப்.20) தொடர்ந்தது.

அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், "LGBTQIA+ உறவுகளை குற்றமற்றதாக அறிவித்து ஒரு வானவில் நம்பிக்கைக் கீற்றை ஏற்படுத்தியபோதே தன்பாலினத்தவர் இடையேயான 'திருமணம் போன்ற நிலையான உறவுகளை' நாங்கள் சிந்தித்தோம். தன்பாலின உறவை அவர்கள் தற்செயலாக நடந்த உறவாக நினைக்காமல், அதையும் தாண்டிய பந்தமாக உணர்வோருக்காக அதைச் சிந்தித்தோம். சிலருக்கு அந்த உறவு வெறும் உடல் சார்ந்தது இல்லை. உணர்வுகள் சார்ந்தது. அவர்களுக்காக தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது பற்றி நாங்கள் சிந்தித்தோம்" என்றார்.

முன்னதாக, மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில், "நீதிமன்றம் தன்பாலின உறவை கிரிமினல் குற்றமற்றது என்றுமட்டும்தான் 2018 தீர்ப்பில் கூறியது. தன்பாலின திருமணத்தை அங்கீகரிப்பதாகக் கூறவில்லை. ஓர் ஆணும், பெண்ணும் செய்துகொள்ளும் திருமணத்தை தன்பாலின திருமணத்திற்கு சமமானதாகப் பார்க்க முடியாது" என்று வாதிட்டிருந்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் இன்றைய விசாரணையின்போது, "தன்பாலின உறவை கிரிமினல் குற்றமற்றதாக மாற்றும்போது, ​​அது வெறும் பாலியல் உறவுகள் மட்டுமே அல்ல என்பதையும் புரிந்துகொண்டோம். ஆகையால் தன்பாலினத்தவர் உறவை அங்கீகரித்தபோதே அவர்கள் நிலையான உறவில் இருப்பார்கள் என்ற உண்மையையும் நாங்கள் மறைமுகமாக அங்கீகரித்துள்ளோம்" என்று கூறினார்.

நீதிபதி பட் தனது கருத்துகளை பதிவு செய்கையில், "திருமணம் என்ற கருத்தியல் சமகால புரிதலையும் தாண்டியது. திருமணம் ஒருவகையான கட்டமைப்பை நல்குகிறது. அந்தக் கட்டமைப்பு ஒவ்வொரு காலத்திலும் பரிணமித்துக் கொண்டே இருக்கிறது. இதுதான் திருமணம் என்று எந்தக் கல்லிலும் எழுதிவைக்கப்படவில்லை" என்றார்.

தன்பாலின உறவாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங், திருமணம் என்பது பரிணமித்துக் கொண்டிருக்கும் கருத்தியல் என்று கூறியதை ஆமோதித்து நீதிபதி பட் இக்கருத்தைக் கூறினார்.

மாநிலங்களுக்கு கடிதம்: முன்னதாக, தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கக் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த புதிய பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

‘தன்பாலின திருமணம் என்பது மிகவும் முக்கியமான அதேசமயம் சிக்கலான பிரச்சினையும் கூட. அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள திருமணம் என்ற அமைப்பானது பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு கூறுகளும் உள்ளார்ந்த வகையில் ஒன்றோடொன்று தொடர்புடையது. அதுமட்டுமின்றி அதில் மேற்கொள்ளப்படும் மாற்றம் அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.

எனவே இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்துகளை கேட்டறிவது மிகவும் முக்கியமானது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர்கள் பதிலளிக்க கோரி அனைத்து மாநிலங்களுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசு அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், “இந்த விவகாரத்தில் எந்த முடிவு எடுத்தாலும் மாநிலங்களின் உரிமைகள், குறிப்பாக, சட்டமியற்றும் உரிமை பாதிக்கப்படும் என்பது மத்திய அரசின் கருத்தாகும்” என்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE