கர்நாடகா தேர்தல் | இபிஎஸ்ஸை தொடர்ந்து அதிமுகவுக்கு வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணியும் வேட்பாளரை அறிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரையும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் நேற்று அறிவித்தார். அதிமுக சார்பில் டி.அன்பரசன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், புலிகேசி நகரில் அதிமுக தரப்பில் நெடுஞ்செழியன் அதிகாரபூர்வ வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், "10.05.2023 அன்று நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக புலிகேசி நகர் தொகுதியில் எம்.நெடுஞ்செழியன், கர்நாடக மாநில மாணவர் அணிச் செயலாளர் நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வாகி இருந்தாலும்கூட தேர்தல் ஆணையத்தில் அதிமுக பிரச்சினை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றே அடையாளப்படுத்திவருகிறார். இந்நிலையில் அதிமுக சார்பில் அவரும் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதிக்கு போட்டி வேட்பாளரை அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE