கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் பசவராஜ் வேட்பு மனு தாக்கல்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக தேர்தலில் வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. ஜாதக முறைப்படி நேற்று நல்ல நாளாக கருதப்பட்டதால் முதல்வர் பசவராஜ் பொம்மை, ஷிகோன் தொகுதியில் 2-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, கன்னட நடிகர் சுதீப் ஆகியோருடன் ஊர்வலமாக சென்ற பசவராஜ் பொம்மை அங்குள்ள பசவேஸ்வரா கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நேற்று மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார். பின்னர் ஊர்வலமாக சென்ற அவர் வ‌ருணா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜகவில் சீட் கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் சார்பில் ஹூப்ளி தார்வாட் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர் காங்கிரஸ் சார்பில் கொரட்டகரே தொகுதியிலும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா பாஜக சார்பில் ஷிகாரிப்புரா தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் மேலும் பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE