ஆதரவு எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் பாஜகவுக்கு வருவதை ஏற்க மாட்டோம்: சிவ சேனா

By செய்திப்பிரிவு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைய முயன்றால், கூட்டணியில் இருந்து சிவ சேனா வெளியேறிவிடும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்ட்டிர முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேருடன் கட்சியில் இருந்து பிரிந்து வந்து பாஜகவோ கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதனை அவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவ சேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சத், ''எங்கள் முடிவு தெளிவானது. முதுகில் குத்தக்கூடிய கட்சி தேசியவாத காங்கிரஸ். அக்கட்சியோடு சேர்ந்து நாங்கள் ஆட்சியில் இருக்க மாட்டோம். நாங்கள் வெளியேறிவிடுவோம். ஏனெனில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு சிவ சேனா இருப்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நீடிக்கப் போவதில்லை என அஜித் பவார் இதுவரை கூறவில்லை. அதேநேரத்தில், அந்தக் கட்சியில் அவருக்கு சுதந்திரம் இல்லை. அஜித் பவார் மட்டும் பிரிந்து வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். ஆனால், அவர் தனது ஆதரவாளர்களோடு வந்தால் நாங்கள் அரசில் இருக்க மாட்டோம். 2019-ல் அமைக்கப்பட்ட கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு அஜித் பவார்தான் பொறுப்பு. ஆனால், எதனால் அது நிகழ்ந்தது என்பதை இதுவரை அவர் வெளிப்படுத்தவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE