தன்பாலின திருமண வழக்கு குறித்து மாநிலங்களுக்கு கடிதம் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தன்பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிப்பது குறித்து மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தன்பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. பின்னர், இந்த மனுக்களை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று கடந்த மார்ச் 13-ம் தேதி அறிவித்த நீதிமன்றம், இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதன்படி, மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், தன்பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதைச் சட்டபூர்வமாக்கக் கோருவது என்பது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை என்றும், இது சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்த வழக்கின் பிரதான மனுதாரர்களான சுப்ரியோ மற்றும் அபய் தங் ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ''தன்பாலினத்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்காதது பாரபட்சமானது. தன்பாலின தம்பதிகளின் கண்ணியம் மற்றும் சுய விருப்பத்திற்கு எதிரானது. நாட்டின் மக்கள் தொகையில் 7 முதல் 8 சதவீதம் வரை தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். ஊதியம், பணிக்கொடை, தத்தெடுப்பு, வாடகைத்தாய் என பலவற்றுக்கும் சட்ட பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், தன் பாலின திருமணத்திற்கு மட்டும் சட்ட பாதுகாப்பு இல்லை. எனவே, தன்பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்'' என வாதங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய அரசு நேற்று (ஏப்.18) கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்றத்தில் இதனை இன்று தெரிவித்தார். அப்போது, மத்திய அரசின் இந்த நடவடிக்கை சிறப்பானது என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

எனினும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞரான முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசு இதனை இப்போது செய்திருப்பது தேவையற்றது என்று அவர் குறிப்பிட்டார். சிறப்பு திருமணச் சட்டம் 1954-க்கு எதிராகவே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது; திருமணம் என்பது பொதுப்பட்டியலில் உள்ளதைக் காரணம் காட்டி, இதில் மாநிலங்களை இணைப்பது முற்றிலும் தவறானது என அவர் வாதிட்டார்.

இதற்கு எதிராக அரசு தரப்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''திருமணம் என்பது பொதுப்பட்டியலில் உள்ளபோது ஒரு மாநிலம் ஆதரிப்பதாகவும், ஒரு மாநிலம் எதிர்ப்பதாகவும் இருக்க முடியாது. அதோடு, இந்து திருமணச் சட்டம் அல்லது சிறப்பு திருமணச் சட்டத்தில் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியான விதிகளைக் கொண்டிருக்கின்றன.

இந்த விவகாரத்தில் எனக்கோ அல்லது வேறு ஒரு நபருக்கோ தெளிவான பார்வை இருக்கலாம். ஆனால், அது நாட்டின் பார்வையாக இருக்க முடியாது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க முடியும். நீதிமன்றம் அல்ல. நீதிபதிகளாக இருக்கும் 5 அறிவுஜீவி நபர்கள், நாட்டிற்காக முடிவெடுக்க முடியாது. சட்டபூர்வ புதிய சமூக கட்டமைப்பை அவர்கள் அங்கீகரிக்க முடியாது'' என்று தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞரான கே.வி. விஸ்வநாதன், அடிப்படை உரிமைகளுக்காக நாடாளுமன்றத்திடமோ, சட்டமன்றத்திடமோ மனுதாரர்கள் காத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE