இந்தியாவில் மீண்டும் 10,000-ஐ கடந்த அன்றாட கோவிட் தொற்று

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,542 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது முந்தைய நாள் தொற்றைவிட 38 சதவீதம் அதிகமாகும். இதனால் நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 63,562 ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் 10,000-ஐ கடந்தது: முன்னதாக திங்கள் கிழமை தொற்று பாதிப்பு 9.111 என்றும் செவ்வாய்க்கிழமை பாதிப்பு 7,633 என்றும் இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று மீண்டும் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 45 ஆயிரத்து 401 என்றளவில் உள்ளது. அன்றாட பாசிடிவிட்டி விகிதம் என்பது 4.39 சதவீதமாக உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் என்பது 5.1 சதவீதமாக இருக்கிறது. ( கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் 100 பேரில் எத்தனை பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகிறது என்பதுதான் பாசிடிவிட்டி ரேட் எனக் குறிப்பிடப்படுகிறது )

கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் மட்டும் 11 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் இதுவரை கோவிட் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,190 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளையில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றிலிருந்து 8175 பேர் குணமடைந்தனர். இதனால் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்தம் எண்ணிக்கை 4,42,50,649 ஆக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,20,66,27,758 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE