உ.பி போலீஸாருக்கு சவால்: தலைமறைவான அத்தீக் மனைவி சாயிஸ்தா, சகா குட்டு முஸ்லிமினை கைது செய்ய தீவிரம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தாதா அரசியல்வாதி அத்தீக்கின் மனைவி சாயிஸ்தா பர்வீன், அத்தீக்கின் சகாவான குட்டு முஸ்லிம் தலைமறைவு தொடர்கிறது. இருவரையும் கைது செய்வது உபி காவல்துறைக்கு பெரும் சவாலாகி விட்டது.

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ராஜுபால் வழக்கின் முக்கிய சாட்சி உமேஷ்பால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் 10 குற்றவாளிகளில் அத்தீக், அஷ்ரப், சாயிஸ்தாவுடன் குட்டு முஸ்லிமும் இடம் பெற்றுள்ளார். இவர் வீசிய குண்டால் தான் உமேஷ்பாலின் பாதுகாவலர் கொல்லப்பட்டார். குட்டு முஸ்லிம் வெடிகுண்டை வீசியது சிசிடிவி பதிவில் தெளிவாக உள்ளது.

அப்போது முதல், முக்கிய குற்றவாளியான குட்டு முஸ்லிமை உ.பி காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குட்டு முஸ்லிமின் தலைமறைவு மிகவும் ஆபத்தானது என உ.பி அதிரடி படையினர் கூறியுள்ளனர்.

ஏனெனில், குட்டுவை சிக்க வைத்து அத்தீக் சகோதரர்கள் கடும் தண்டனைகளிலிருந்து தப்பிவிட முயற்சித்தனர். இதற்காக குட்டுவின் பெயரையும் போலீஸாரிடம் அவர்கள் கூறத் துவங்கினர். கடைசியாக தான் கொல்லப்படும் முன், பத்திரிகையாளர்களிடம் அத்தீக், குட்டுவின் பெயரைக் கூற முயன்றதாகக் கருதப்படுகிறது. தன்னை சிக்க வைக்க முயற்சிப்பதால், குட்டு முஸ்லிமால் கூட அத்தீக் சகோதரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என உ.பி போலிஸாருக்கு ஒரு சந்தேகம் உள்ளது.

ஒருவேளை இது தவறானத் தகவல் எனில் குட்டுவால் அத்தீக்கின் கொலைக்கு பழிவாங்கும் படலம் துவங்கும் ஆபத்தும் உள்ளதாக அஞ்சப்படுகிறது. உ.பி காவல்துறையின் தொடர்பிலும் குட்டு இருப்பதாக ஒரு பேச்சு உள்ளது.

குட்டுவின் உதவியால்தான் அத்தீக்கின் மகன் ஆசாத்தை ஜான்சியில் என்கவுன்ட்டர் செய்ததாகவும் ஒரு கருத்து உள்ளது. உ.பி.யின் குற்றவியல் பட்டியலில் இடம்பெற்ற அரசியல்வாதிகளான தனஞ்செய்சிங், அபய்சிங் மற்றும் முக்தார் அன்சாரி ஆகியோரிடம் ஒருவருக்கு பின் ஒருவர் என குட்டு, அடியாளாகப் பணியாற்றியுள்ளார்.

பிரயாக்ராஜின் ஒரு பள்ளி ஆசிரியரை கொலை செய்த குற்றத்தில் முதன்முறையாக 1997 இல் கைதானார் குட்டு. பிறகு போதைப் பொருள் கடத்தலிலும் 1999 இல் கைதானவரை அத்தீக் தன் வழக்கறிஞர் மூலம் ஜாமீனில் எடுத்திருந்தார்.

பிறகு உ.பி குற்றவியல் பட்டியலில் இடம்பெற்ற குட்டு, அருகிலுள்ள பிஹாரில் தஞ்சம் அடைந்திருந்தார். இங்கு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டவரை அத்தீக் ரூ.8 லட்சங்கள் அவரை செலவு செய்து காப்பாற்றி உள்ளார்.

அப்போது முதல் அத்தீக்கின் விசுவாசியாக விட்டார் குட்டு. அத்தீக் உடனான நெருக்கத்தால் குட்டு, மதம் மாறி தனது பெயரை குட்டு முஸ்லிம் என வைத்துக் கொண்டார். தற்போது மகராஷ்டிரா அல்லது கர்நாடகாவில் தலைமறைவாகி விட்டதாகத் தகவல் உள்ளது.

குட்டுவை, உ.பி காவல் படையினர் தேடி வருகின்றனர். இவர் உயிருடன் அல்லது என்கவுன்ட்டர் செய்யப்படுவதை பொறுத்து, குட்டுவின் உண்மை நிலை தெரியவரும்.

இதனிடையே, ஏப்ரல் 15 இல் தன் கணவர் அத்தீக் கொல்லப்பட்டதால் அவரது மனைவி சாயிஸ்தா பர்வீன் நீதிமன்றத்தில் சரணடைவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அத்தீக்கின் பல ஆயிரம் கோடிகளை காப்பாற்ற வேண்டி தனது எண்ணைத்தை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.

இத்தனைக்கும் உ.பி முதல்வர் யோகியால், அத்தீக்கின் ரூ1168 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன. தனது கணவர் அத்தீக், சகோதரர் அஷ்ரப் மற்றும் மகன் அஸத் ஆகியோரின் முகங்களை இறுதிமுறை ரகசியமாகப் பார்க்கவும் சாயிஸ்தா முயற்சிக்கவில்லை.

தனது உறவுகள் யாரிடமும் சாயிஸ்தா தொடர்பில் இல்லை எனக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, அவரை பிடிப்பது உ.பி. போலீஸாருக்கு பெரும் சவாலாகி விட்டது.

சரிநிகராக கணவரின் சட்டவிரோதத் தொழிலில் முக்கிய பங்காளராக இருந்துள்ளார் சாயிஸ்தா. அத்தீக்கின் ஆட்களுக்கு சட்டவிரோத செயல்களை வகுத்துக் கொடுப்பதில் சாயிஸ்தா வல்லவர் எனவும் .உ,பி. காவல்துறை குற்றப்பதிவேட்டில் பதிவாகி உள்ளது. இவரது கைதால், அத்தீக் பற்றிய மேலும் பல உண்மைகள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.

சிறையிலிருந்தும் தேர்தல்

மூன்று முறை சிறையிலிருந்தபடி, மொத்தம் 5 முறை வென்று எம்எல்ஏவாகி உள்ளார் அத்தீக். நான்கு முறை சுயேச்சையாகவும், ஒருமுறை சமாஜ்வாதியிலும் வென்றிருந்தார். 1999 இல் அப்னாதளம் கட்சிக்கு தாவியவர், மீண்டும் சமாஜ்வாதியில் இணைந்து 2004 இல் எம்.பி.யானார் அத்தீக்.

அத்தீக்கின் சரிவு

கடந்த 2007 இல் அத்தீக் சமாஜ்வாதியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னணில், பிரயாக்ராஜின் ஒரு மதரஸா மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ததாக அத்தீக் மீதானப் புகார் இருந்தது. ஒரு இரவிற்கு பின் இந்த மாணவியை மறுநாள் வாசலில் உயிரற்ற நிலையில் வீசப்பட்டிருந்தார்.

இதனால், அப்போது முதல் அத்தீக்கின் செல்வாக்கு சரியத் துவங்கியது. 2014 மக்களவையிலும் சிறையிலிருந்தபடி வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து சுயேச்சையாக செய்த மனு தள்ளுபடியானது.

காந்தி குடும்பத்தின் நிலம் மீட்பு

நில ஆக்கிரமிப்பை முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்த அத்தீக் அகமது, சோனியா குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. இவரது மாமனார் பெரோஸ் காந்தியின் சகோதரி வீரா காந்தி பிரயாக்ராஜில் வசித்தார்.

பல கோடி மதிப்பிலான வீராவின் சொத்தை அத்தீக் 2007இல் ஆக்கிரமித்துள்ளார். இந்த புகார் சோனியாவுடம் செல்ல, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கின் அலுவலக அதிகாரிகள் அதில் தலையிட்டதாகத் தெரிகிறது. உ.பி அரசிடம் பேசி அத்தீக்கிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தை உடனடியாக விற்று விட்டார் வீரா காந்தி.

பாஜகவிற்கு சாதகமா?

உ.பி தாதாவான அத்தீக்கின் கொலைக்கு பின் சில ஊடகங்கள் தேர்தல் கணிப்பு நடத்தியுள்ளனர். இதில் பாஜக பலனடையும் என 47 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். இதனால், இழப்பு என 17 சதவிகிதமும், பாஜக மீது எந்த தாக்கமும் இருக்காது என 26 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE