இந்திய விமானப் படையின் செயல்திறனைக் காட்டியது ‘பாலகோட் தாக்குதல்’ - விமானப் படைத் தலைவர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் அதன் செயல்திறனைக் காட்டியதாக விமானப் படைத் தலைவர் வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், ''ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் துணை ராணுவப் படை வீரர்கள் பயணித்த பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, அந்தத் தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் பாலகோட் பயிற்சி மையத்தின் மீது நமது விமானப் படை வான் தாக்குதலை நடத்தியது. போரும் இல்லை; அமைதியும் இல்லை என்ற சூழலில் அணு ஆயுத அச்சுறுத்தலையும் தாண்டி, அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. நாட்டின் அரசியல் தலைமை தனது துணிவை வெளிப்படுத்தினால், நமது விமானப்படை எவ்வாறு சிறப்பாக தனது சக்தியை வெளிப்படுத்தும் என்பதற்கு பாலகோட் தாக்குதல் ஓர் உதாரணம்.

நமது எதிரிகளின் இயல்பைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இது மிகவும் முக்கியமானது. நமது விமானப்படை நெகிழ்வுத்தன்மையுடன் கூடியது. அதேநேரத்தில், துல்லியமாக தாக்கக்கூடியது. மோதல் தீவிரமடையாமல் இருப்பதற்கு ஏற்ற தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்பது உத்தரவாக இருக்குமானால், அதற்கு ஏற்ப விமானப் படை தனது திறனை வெளிப்படுத்தும்.

எதிர்காலத் தலைமுறைக்கான போர் விமானங்கள்தான், எதிர்கால போரை தீர்மானிக்கக்கூடியவையாக இருக்கும். முதலில் பார்; தெளிவாகப் பார்; முதலில் சென்றடை; முதலில் தாக்கு; துல்லியமாகத் தாக்கு என்பதுதான் நவீன போருக்கான மந்திரம். போர்க் கள வெளிப்படைத்தன்மை, மேம்பட்ட விரைவான இயக்கம், மிக மிக துல்லியமான தாக்குதல் ஆகியவைதான் வெற்றிக்கு முக்கியம். வீரர்களுக்கு நமது விமானப்படை அளிக்கும் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி இத்தகைய தாக்குதலை உறுதிப்படுத்தும்.

நிலையற்ற, நிச்சயமற்ற, சிக்கலான, தெளிவற்ற சூழல் உருவாகிறது என்றால், அதனை உணர்ந்து உடனடியாக நாம் செயலில் இறங்க வேண்டும். ஏனெனில், அதுதான் அதற்கான நேரம்'' என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE