புல்வாமா தாக்குதல் விவகாரம்: முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் நினைவு இழந்துவிட்டதாக பாஜக கடும் விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் நினைவிழந்துவிட்டார் என்றும், அவர் மனநல மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த இருபெரும் நிகழ்வுகளான சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் புல்வாமா தாக்குதல் ஆகியவற்றின்போது அம்மாநில ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். 2019 இறுதியில் அவர் கோவா ஆளுநராக மாற்றப்பட்டார். அதன் பிறகு மேகாலயாவுக்கு மாற்றப்பட்ட சத்யபால் மாலிக், கடந்த 2022 அக்டோபரில் ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் சத்யபால் மாலிக், துணை ராணுவப் படையினர் 40 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த புல்வாமா தாக்குதல் குறித்த அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டரில் பயணிக்க அனுமதி கோரியதாகவும், ஆனால், உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காததால் அவர்கள் ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்தில் பயணித்ததாகவும், அதனை அடுத்தே அவர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கானதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு, புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியம் குறித்து பேச வேண்டாம் என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாகவும் மாலிக் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்து தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்யபால் மாலிக்கின் கருத்து குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் பாஜக செய்தித் தொடர்பாளர் அல்தாப் தாக்கூர், ''ராணுவமாக இருந்தாலும், துணை ராணுவப் படையாக இருந்தாலும் அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடிய கட்சி பாஜக. புல்வாமா தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கையை எடுத்தது. தாக்குதலுக்குக் காரணமாக இருந்த பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது மத்திய அரசு.

ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் பயணிப்பது என்பது புதிதல்ல. நூறாண்டுகளாக அவர்கள் அந்த சாலையில்தான் பயணிக்கிறார்கள். சத்யபால் மாலிக் எப்போதுமே சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுபவர். தற்போது அவருக்கு வயதாகிவிட்டதால் நினைவிழந்துவிட்டார். ஏற்கெனவே, மனநல மருத்துவமனைக்குச் சென்றவர் அவர். தற்போது அங்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE