அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்  

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்குவங்கம், பிஹாரின் சில பகுதிகள், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கங்கை நதிக்கு தெற்கே உள்ள மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் மற்றும் பிஹார் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலை தொடரும். அதேபோல் சிக்கிம், ஒடிசா மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரம் வரை வெப்ப அலை நீடிக்கும். ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள், ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும்.

கடந்த 6 நாட்களாக மேற்கு வங்கத்திலும், கலோர ஆந்திராவில் 4 நாட்களாகவும், பிஹாரில் 3 நாட்களாகவும் வெப்பநிலை அதிகளவில் நிலவி வருகிறது. நாட்டிலுள்ள 36 வானிலை மையங்களில் 42 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ப்ரயாக்ராஜ் மற்றும் ஒடிசாவின் பரிபாடா நகரங்களில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் திங்கள்கிழமை 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. டெல்லியில் மூன்றாவது முறையாக 40 டிகிரிக்கும் அதிமான வெப்பம் பதிவாகியிருக்கிறது. மேற்கு வங்கத்தின் கிழக்குப்பகுதியில் கடந்த ஒருவாரமாக வெப்ப அலை நிலவி வருகிறது. இந்தநிலையில், அதிகரிக்கும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு திங்கள்கிழமை முதல் அடுத்த வாரம் சனிக்கிழமை வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் மூட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களிலும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. திரிபுரா தலைநகர் அகர்தலாவில், திங்கள்கிழமை அதிகபட்சமாக 38 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 5 டிகிரி அதிகமாகும். அங்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏப்.23 வரை விடுமுறையளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலை குழந்தைகள், வயதானவர்கள், நாள்பட்ட நோயாளிகளை அதிகம் பாதிக்கக்கூடும் என்றும், வெப்பம் தொடர்பான நோய்களில் இருந்து காத்துக்கொள்ள அதிக அளவு தண்ணீர் குடிப்பது, ஓஆர்எஸ் கரைசல், வீட்டில் தயாரிக்கும் பழச்சாறுகள் போன்ற பானங்களை அடிக்கடி குடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE