தன்பாலினத்தவர் திருமணம் விவகாரம் | 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தன்பாலினத்தவர் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்கிறது.

தன்பாலினத்தவர் அதாவது ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் எஸ்கே கவுல், எஸ் ரவீந்திர பட், பிஎஸ் நரசிம்மா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது.

சுப்ரியோ மற்றும் அபய் தங் ஆகியோர் இந்த வழக்கில் பிரதான மனுதாரர்களாக உள்ளனர். இவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, வழக்கறிஞர் அருந்ததி கட்ஜூ, கோவிந்த் மனோகரன் ஆகியோர் வாதாடுகின்றனர். ''தன்பாலினத்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்காதது பாரபட்சமானது. தன்பாலின தம்பதிகளின் கண்ணியம் மற்றும் சுய விருப்பத்திற்கு எதிரானது. நாட்டின் மக்கள் தொகையில் 7 முதல் 8 சதவீதம் வரை தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். ஊதியம், பணிக்கொடை, தத்தெடுப்பு, வாடகைத்தாய் என பலவற்றுக்கும் சட்ட பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், தன்பாலின திருமணத்திற்கு மட்டும் சட்ட பாதுகாப்பு இல்லை. எனவே, தன்பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்'' என அவர்கள் தங்கள் தரப்பு வாதமாக முன்வைக்கின்றனர்.

டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தன்பாலின திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ''தன்பாலின தம்பதிகளும் நல்ல பெற்றோராக இருப்பார்கள். தன்பாலின திருமணங்களை நெதர்லாந்து கடந்த 2000 ஆம் ஆண்டு சட்டபூர்வமாக்கியது. இதையடுத்து, 34 க்கும் மேற்பட்ட நாடுகள் தன்பாலின திருமணங்களை சட்டம் மூலமாகவோ அல்லது நீதிமன்ற தீர்ப்பு மூலமாகவோ சட்டபூர்வமாக்கியுள்ளன. தற்போது 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் தன்பாலின தம்பதிகள் குழந்தைகளை சட்டப்பூர்வமாக தத்தெடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். 2020 ஆம் ஆண்டு அமெரிக்கன் சோஷியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில், தன்பாலினப் பெற்றோரால் பிறப்பிலிருந்து வளர்க்கப்பட்ட குழந்தைகளின் கல்வி முடிவுகள், வேறு பாலினப் பெற்றோர்களைக் கொண்ட குழந்தைகளை விட சிறப்பாக செயல்பட்டதாகக் காட்டுகிறது'' என டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும், தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மத, சமூக, அரசியல் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என கோருவது நகர்ப்புற மேல்தட்டு பார்வை என மத்திய அரசு இந்த கோரிக்கையை விமர்சித்துள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு நேற்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. அதில், ''தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை. தன்பாலின திருமணங்களை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய சமூக நிறுவனத்தை உருவாக்க நீதிமன்றம் முயலக்கூடாது. நீதிபதிகள் இந்த பணியை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். இதுபோன்ற 'வேறு வகை' திருமணங்களை சமூக ரீதியாகவும் மத ரீதியாகவும் ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள்.

நகர்ப்புற மேல் தட்டு பார்வையுடன்கூடிய மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது, அந்த மனுக்களின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். கிராமப்புற மக்கள் மற்றும் சிறிய நகரங்களில் வாழும் மக்களின் கருத்துக்கள், அவர்களின் குரல்கள், மதப் பிரிவுகள், தனிப்பட்ட சட்டங்கள், வழக்கங்கள், மற்ற திருமண முறைகள் மீது தன்பாலின திருமணம் ஏற்படுத்தும்ம் விளைவுகள் என விரிந்த பார்வையில் இதனை பார்க்க வேண்டும். தற்போது திருமணம் என்பது சட்டத்தின்படியும், மதத்தின்படியும் புனிதமான ஒன்றாக, பன்முகத்தன்மை கொண்ட அமைப்பாக உள்ளது. தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டால் அது ஒவ்வொரு குடிமகனின் நலன்களையும் தீவிரமாக பாதிக்கும்'' என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் இணைந்துள்ள மத்தியப் பிரதேச மாநில அரசு, தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என அது தெரிவித்துள்ளது. டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தன்பாலின திருமணங்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதேபோல், சனாதன தர்ம பிரதிநிதி சபை, ஜாமியாத் உலாமி இ இந்த், தெலங்கானா மர்காழி ஷியா உலேமோ கவுன்சில், அகில பாரதிய சந்த் சமிதி ஆகியவை தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE