பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தது ஏன்? - ஜெகதீஷ் ஷெட்டர் விளக்கம்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஏன் என்பது குறித்து முன்னாள் முதல்வரான ஜெகதீஷ் ஷெட்டர் விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். இவர், கர்நாடக பாஜக தலைவராகவும், மாநில முதல்வராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். அவர் திடீரென நேற்று பாஜகவில் இருந்து விலகி, இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இது கர்நாடக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தான் ஏன் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தேன் என்பது குறித்து ஜெகதீஷ் ஷெட்டர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ''நேற்று பாஜகவில் இருந்து விலகினேன். இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளேன். பாஜகவில் எதிர்க்கட்சித் தலைவராக, முதல்வராக, கட்சித் தலைவராக இருந்த நான் அதில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. பாஜக எனக்கு ஒவ்வொரு பொறுப்பையும் கொடுத்தது. நானும் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளேன்.

நான் கட்சியின் மூத்தத் தலைவராக இருந்தும் இம்முறை எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதோடு, ஒருவரும் என்னை சமாதானப்படுத்தவில்லை; வேறு பொறுப்பு அளிப்பது குறித்து வாக்குறுதியும் அளிக்கவில்லை.

இந்தச் சூழலில்தான் டி.கே. சிவகுமார், சித்தராமைய்யா, சுர்ஜேவாலா உள்ளிட்டோர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்தார்கள். வேறு வாய்ப்பு இல்லாத நிலையில், முழு மனதோடு நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன்'' என்று தெரிவித்துள்ளார். ஹூப்லி - தார்வாட் மத்திய தொகுதியில் இருந்து 6 முறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரான ஜெகதீஷ் ஷெட்டர், இம்முறை காங்கிரஸ் கட்சி சார்பில் அந்தத் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

ஜெகதீஷ் ஷெட்டர் விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ''அவர் எங்கள் கட்சியின் மூத்தத் தலைவர்; முக்கியத் தலைவர். அவருக்கு டெல்லியில் பெரிய பதவியைத் தருவது தொடர்பாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, அவரிடம் வாக்குறுதி அளித்திருந்தார். ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலேயே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததற்கு எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''ஜெகதீஷ் ஷெட்டர் கட்சியில் நீண்ட காலமாக இருந்தவர். அவருக்கு கட்சி பல்வேறு பதவிகளை அளித்துள்ளது. அமைச்சர், முதலமைச்சர், கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு பதவிகள் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நானும், மறைந்த ஆனந்த் குமாரும் அவரை பாதுகாத்தும், உதவியும் வந்தோம். அவரை ஒரு தலைவராக உருவாக்கினோம். தற்போது அவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தது மன்னிக்க முடியாத குற்றம். அவர் கட்சியின் முதுகில் குத்திவிட்டார். கர்நாடக மக்கள் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவரான ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு அச்சமூகத்தின் மத்தியில் கூடுதல் ஆதரவை அளிக்கும் என சொல்லப்படுகிறது. இதனால், காங்கிரஸ் உற்சாகமடைந்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்