புதுடெல்லி: டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தனது இல்லத்தில் தமிழ் வருடப்பிறப்பு விழாவை முதல் முறையாக நடத்தினார்.
பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களாக உள்ள தமிழர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு தமிழின் பெருமையை பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைத்ததை நினைவுகூர்ந்த பிரதமர், இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்கையும் அங்கீகரித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள், தமிழ் வளர்ச்சியின் பெயரில் பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியாக தோன்றுகிறது.
ஏனெனில் பாஜகவால் நாட்டின் பிற மாநிலங்களை போல் இந்துத்துவா கொள்கையை தமிழகத்தில் முன்னிறுத்த முடியவில்லை. இதற்கு மாற்றாக, தமிழர்களுக்கு தமிழ் மீதான அதீத ஈடுபாட்டை புரிந்துகொண்டு அம்மொழிக்கான நடவடிக்கைகள் மத்திய அரசால் தொடங்கப்பட்டன. கடந்த 2014-ல் இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றது முதல் நாடாளுமன்றத்தில் தமிழ் அதிகமாக ஒலிக்கத் தொடங்கியது. மத்திய பட்ஜெட் தாக்கலின் போதும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தமிழ் மொழியின் பெருமைகள் தவறாமல் இடம்பெறத் தொடங்கின.
பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் தமிழக மேடைகளில் தமிழ் மற்றும் திருவள்ளுவரின் பெருமைகளை பேசத் தொடங்கினார். இதற்கு கிடைத்த ஆதரவை மேலும் கூட்ட சென்னையிலுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அவரது கவனத்துக்கு வந்தது.
» திறந்தவெளியில் நடந்த மகாராஷ்டிர அரசு விருது வழங்கும் விழா - வெயிலின் தாக்கத்தால் 11 பேர் பலி
» அத்திக் அகமது கொலை வழக்கு - கைதான மூவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்
கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது. இதன் பின்னணியில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி இருந்தார். இந்நிலையில் தமிழ் மொழி மீதான பிரதமரின் ஆர்வம் செம்மொழி நிறுவனத்தை புதிய கட்டிடத்தில் தூக்கி நிறுத்தியது. இந்நிறுவனத்தில் 13 வருடங்களாக தொடர்ந்த பொறுப்பு இயக்குநர் முறைக்கும் பிரதமர் முடிவு கட்டினார். இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் சார்பில் சுமார் 50 செவ்வியல் இலக்கிய நூல்கள் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. கடந்த வருடம் நவம்பரில் பிரதமரின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில், ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நடத்தப்பட்டது. இதன் மேடையில் செம்மொழி நிறுவனத்தால் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்களும் பிரதமர் மோடியால் வெளியிடப்பட்டன.
பல்வேறு கருத்து வேறுபாடுகளை கொண்ட தமிழக மடங்களின் 11 ஆதீனங்களை, முதன்முறையாக ஒரே மேடையில் அமர்த்தி கவுரவித்திருந்தார் பிரதமர் மோடி.
தமது கட்சியின் ஆன்மிக நோக்குடன் தமிழையும் இணைக்கும் முயற்சி காசி விஸ்வநாதர் கோயிலில் நிகழ்ந்தது. இதனுள் முதல் தமிழனின் குரலாக இசைஞானி இளையராஜாவின் பக்தி இசைக் கச்சேரி நடைபெற்றது. மேலும் காசி விஸ்வநாதர் முன்பு, பழம்பெரும் பக்தி இலக்கியங்களான தேவாரத்துடன், திருவாசகத்தையும் அன்றாடம் தமிழில் பாடவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அத்துடன் பாரதி பிறந்த நாளான டிசம்பர் 11-ஐ தேசிய மொழிகள் தினமாகவும் மத்திய அரசு அறிவித்து, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. வாரணாசியில் பாரதி சில ஆண்டுகள் வாழ்ந்த வீட்டின் ஒரு சிறிய அறையில் தமிழ்நாடு அரசு சார்பில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை விடப் பிரம்மாண்டமாக, மத்திய அரசு சார்பில் அந்த வீடு முழுவதிலும் நவீன ஒளி, ஒலி லேசர் காட்சிகளுடன் நினைவுச்சின்னம் அமைக்க முயற்சிக்கப்படுகிறது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர் குழு, தமிழக ஆளுநர் மாளிகைக்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் தமிழகத்தின் முக்கிய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை ஆளுநர் எடுத்துரைக்கச் செய்தார். இதில் சில வரலாற்று சுற்றுலாத் தலங்களும் அடங்கும். வாரணாசியை அடுத்து பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்திலும் மத்திய அரசு தமிழ்ச் சங்கமம் நடத்துகிறது. அலகாபாத்தில் ஏப்ரல் 17 முதல் 27 வரை 10 நாட்களுக்கு ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஒரு மாதத்திற்கு நடக்கும் என்று தெரிகிறது.
இவை அனைத்துக்கும் மேலாக, வட மாநிலங்களில் தமிழ் மொழியை வளர்க்க, ஒரு நிறுவனத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இந்தியை வளர்க்க மகாத்மா காந்தியால் 1918-ல் சென்னையில் தொடங்கப்பட்ட இந்தி பிரச்சார சபா போல், தமிழ் பிரச்சார சபா அனைத்து மாநிலங்களிலும் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இதுவரை எந்த மத்திய அரசும் செய்யாத ஒரு முக்கிய நடவடிக்கையையும் பிரதமர் மோடி செய்துள்ளார். உலகின் பழமையான மொழி சம்ஸ்கிருதமா? தமிழா? என்ற விவாதம் பல நூற்றாண்டுகளாக இவ்விரு மொழி அறிஞர்கள் இடையே தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘உலகின் பழமையான மொழி தமிழ்தான்’ என முதன் முறையாக காசி தமிழ்ச் சங்கமம் மேடையில் பிரதமர் மோடி அறிவித்தார். இதுபோல், தமிழ் மொழிக்காக மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து அரங்கேற்றும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து பாஜகவின் தேசியத் தலைவர்களிடம் கேட்டபோது, “எந்த தமிழை ஆயுதமாக்கி திராவிட கட்சிகள் வளர்ந்தனவோ, அதே மொழியை நாங்கள் மட்டும் தமிழகத்தில் பயன்படுத்தக் கூடாதா?” என எதிர்க்கேள்வி எழுப்புகின்றனர். எனவே, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க தமிழை வளர்க்கும் பாஜகவின் எண்ணம் நிறைவேறுமா? எனும் கேள்வியும் நிலவுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago