கவுரி லங்கேஷைப் பற்றியும் அவரது படுகொலையைப் பற்றியும் பேச நிறைய இருக்கின்றன. முதலாவது, அவர் கருத்துகளை உருவாக்குவதில் வல்லவர், துணிச்சல் மிக்க பகுத்தறிவாளர், இடதுசாரி சிந்தனையாளர். இரண்டாவது, மிரட்டல்களுக்கு அஞ்சாமல், மனதில் இருப்பதைப் பேசும் நெஞ்சுரம் மிக்கவர். மூன்றாவதாக, அவரது வாதங்களை ஏற்றுக்கொண்டவர்கள் உணர்ச்சிவயமானார்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் கோபாவேசமானார்கள். கடந்த பத்தாண்டுகளாக நிலவும் வழக்கப்படி, அவருடைய செயல்களுக்கு உள்ளர்த்தம் கற்பித்தனர். ஆபாசமாகவும் அச்சுறுத்தும்விதமாகவும் அவரை அர்ச்சித்தனர்.
இது ஒரு அரசியல் படுகொலை என்று நிச்சயமாகக் கூறமுடியும். பிடிக்காத ஒரு கருத்தைக் கூறிவிட்டார் என்பதற்காக ஒருவருடைய உயிரைப் பறிப்பது நியாயம்தான் என்று பேசத் தொடங்கினால், நாம் இப்போதுள்ள நாகரிக நிலையிலிருந்து விலகி காட்டுமிராண்டிகள் காலத்துக்கு வேகமாகப் பின்னோக்கிச் செல்கிறோம் என்று பொருள்.
மகாத்மா காந்தி தொடங்கி அரசியல் படுகொலைகள் என்ற கசப்பான மரபு இந் நாட்டில் தொடர்கிறது. அதிகாரப் போட்டி அல்லது பழிக்குப் பழிவாங்க நடக்கும் இப்படுகொலைகளுக்கு பிரதாப் சிங் கெய்ரோன், லலித்நாராயண் மிஸ்ரா, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்கத்திலும் பிஹாரிலும் சித்தாந்த ரீதியாக எதிரெதிர் முகாம்களில் திரண்ட இடதுசாரிகள், வலதுசாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு, நக்சல்களின் கொலைவெறித் தாக்குதலில் உயிர் தப்பினார். 1978 தொடங்கி 1994 வரையில் பஞ்சாபில் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய சித்தாந்தங்களுக்காகக் கொல்லப்பட்டனர். பஞ்சாப் கேசரி பத்திரிகைக் குழுமத்தின் லாலா ஜகத்நாராயண், பிறகு அவருடைய மகன், பல பத்திரிகையாளர்கள், பத்திரிகை விற்பனையாளர்கள், வீடுகளுக்குச் சென்று விநியோகிப்போர் என்று பலரும் கொல்லப்பட்டனர்.
இப்போதும், யாராவது மத நிந்தனையாகப் பேசினாலே கொன்றுவிடலாம் என்ற மனப்பான்மை நிலவுகிறது. முன்பெல்லாம் இப்படி மதக்கட்டளை பிறப்பிக்க ஒரு சாது அல்லது பாபா அல்லது சந்த் அல்லது மவுலானா தேவைப்பட்டார். இப்போது சமூகவலை தளத்தில் யாராவது, எதையாவது ஆராயாமல் பேசினாலே போதும் குறி வைக்கப்படுகிறது. தேச விரோதி, துரோகி, மதத்தை அவமதித்தவர், அன்னிய கைக்கூலி என்றெல்லாம் முத்திரை குத்திவிடுகின்றனர். பிறகு கொல்வதற்கான நியாயம் ஏற்பட்டுவிடுகிறது!
1978-ல் இந்திரா காந்தியை ஜனதா அரசு கைது செய்ததை எதிர்த்து ‘பாண்டே நண்பர்கள்’ லக்னோவிலிருந்து டெல்லிக்கு ஒரு விமானத்தைக் கடத்திச் சென்றனர். 1980 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்ததும் அவர்கள் மீதான வழக்கு வலுவிழந்தது. ஒரு கொலை நடந்தபிறகு அது மிக விரைவாக அரசியலாக்கப்பட்டால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதுடன் அதற்கான நல்ல பலன்களை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள்.
கவுரி லங்கேஷ் கொலையிலிருந்து சில பாடங்களை நாம் கற்க வேண்டும். முதலாவதாக, போலீஸ் விசாரணையும் பிறகு நீதிமன்ற நடைமுறைகளும் அரசியல் கலப்பு இல்லாமல் நடக்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கூடாது. இதை உரிய நீதிமன்றமே தன் கண்காணிப்பில் மேற்கொள்ளட்டும். நம்முடைய நீதிமன்றங்கள் பல முன்னுதாரணங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்தப் படுகொலையில் அப்படி அரசியல் தலையிட அனுமதித்துவிடக் கூடாது. சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் தீவிரக் கருத்துகள் தொடர்பாகவும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொலைகார கும்பல்களைப் பணிக்கு அமர்த்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம் என்ற நப்பாசை அரசியல் வர்க்கத்துக்கு வரக்கூடாது. எதிர்தரப்பும் அதைத்தான் செய்கிறது என்று யாரும் தங்களுடைய செயலுக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது. சமூக ஊடகங்களில் நடைபெறும் இத்தகைய காழ்ப்புணர்ச்சியுள்ள மோதல்களைத் தடுக்கும் முன் முயற்சியைப் பிரதமர்தான் எடுக்க வேண்டும். இடதுசாரி, வலதுசாரி, ஆஆக போன்றோரால் தொடர்ந்து அவதூறுக்கு ஆளாக்கப்படுகிறவன் என்ற தகுதியில் நான் இவற்றைப் பேசுகிறேன்.
ஊடகத்தாருக்கும் சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கும் இச் சம்பவத்தில் ஒரு பாடம் இருக்கிறது. பேச்சு சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் எல்லோருக்கும் பொது. சுதந்திரச் சிந்தனை என்பது எதிர் கருத்துள்ளவர்களுடன் பேசுவது; அவர்களை முட்டாள் என்றோ ஒழுக்கங் கெட்டவன் என்றோ கூறி கேட்க மறுப்பதல்ல; அப்படிச் செய்தால்தான் இந்த விவாதங்களை நாகரிக நிலைக்கும் வன்முறையின் சாயல் இல்லாமல் திரும்பக் கொண்டுவர முடியும்.
தமிழில்: ஜூரி
சேகர் குப்தா, ‘திபிரிண்ட்’ தலைவர், தலைமை ஆசிரியர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago