புதுடெல்லி: "நான் ஊழல்வாதி என்றால், இந்த உலகில் வேறு யாருமே நேர்மையானவர்கள் இல்லை" என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார். சிபிஐ சம்மன் அனுப்பப்பட்ட பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பின்போது அவர் கூறியதாவது: “நான் கைது செய்யப்படலாம் என்று நேற்றிலிருந்தே பாஜக தலைவர்கள் பலரும் கூறுகின்றனர். பாஜக மேலிடம் ஒருவேளை அப்படியான உத்தரவைப் பிறப்பித்திருந்தால் அதை எப்படி சிபிஐ மீறும்? டெல்லி சட்டப்பேரவையில் நான் ஊழலுக்கு எதிராகப் பேசிய தினமே அடுத்த சம்மன் எனக்குத்தான் வருமென்பது எனக்குத் தெரியும்.
மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் சிபிஐயும், அமலாக்கத் துறையும் எங்களுக்கு எதிராக போலியான சாட்சியங்களை அளித்துள்ளன. ஆனால், உண்மை வேறாக உள்ளது. வழக்கின் முக்கிய சாட்சியம் என்ற பெயரில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போன்களில் 5 போன்கள் மட்டுமே சிபிஐ வசம் உள்ளன. சில அமலாக்கத் துறையிடமும் உள்ளன. நாங்கள் மற்ற போன்களைப் பற்றி வினவினோம். அதற்கு சரியான பதில் இல்லை. அவற்றை இப்போது யாரோ சிலர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
» ராகுல் காந்தி நாளை கோலார் வருகை: ‘மோடி’ பெயர் குறித்த பேச்சு சர்ச்சையான இடத்திலேயே மீண்டும் உரை
சிபிஐ வசமோ, அமலாக்கத் துறையிடமோ எந்த உண்மையான ஆதாரங்களும் இல்லை. அதனால், அவர்கள் போலியான சாட்சியங்களைக் கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்தும் செயல்களும் நடைபெறுகின்றன.
ரூ.100 கோடி ஊழல் நடந்ததாகச் சொல்கின்றனர். ஆனால், எங்கிருந்தாவது ஒரு ரூபாயாவது கைப்பற்றினார்களா? அந்தப் பணத்தை நாங்கள் கோவா தேர்தலில் பயன்படுத்தினோம் என்றும் கூறுகின்றனர். ஆனால் ரெய்டு நடத்தியும் எதுவும் கைப்பற்றப்படவில்லையே. ஒருவேளை நான், “கடந்த டிசம்பர் 17 மாலையில் நரேந்திர மோடிக்கு ரூ.1000 கோடி கொடுத்தேன்” என்று சொன்னால் அதன் அடிப்படையில் அவரைக் கைது செய்ய இயலுமா? கைதுக்கு ஏதாவது சாட்சி வேண்டும்தானே? எங்கள் மீது ரூ.100 கோடி ஊழல் புகார் சொல்பவர்களால் ஏன் ஆதாரங்களைக் கொடுக்க இயலவில்லை.
நாங்கள் பஞ்சாபிலும் இதே முறையிலான கலால் வரிக் கொள்கையைத் தான் பின்பற்றினோம். அங்கே வருவாய் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடியிடம் நான் ஒரே ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஊழல்வாதி என்றால், இந்த உலகில் வேறு யாருமே நேர்மையானவர்கள் இல்லை என்றே அர்த்தம். கடந்த 75 ஆண்டுகளில் எந்த ஓர் அரசியல் கட்சியும் இத்தகைய நெருக்கடிகளை சந்தித்திருக்காது. ஏனென்றால், ஆம் ஆத்மி கட்சி மக்களின் மனங்களில் வறுமை ஒழிப்பு, கல்வி போன்ற நம்பிக்கைகளை விதைத்துள்ளது. எங்களைக் குறிவைத்து அந்த நம்பிக்கையை அழிக்க நினைக்கின்றனர்” என்று கேஜ்ரிவால் கூறினார்.
வழக்கு பின்னணி: டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் தலைமைச்செயலர் நரேஷ் குமார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிக்கை அளித்தார். அதன்பேரில், சிபிஐ விசாரணை நடத்த ஆளுநர் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, அப்போதைய டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் சோதனை நடத்தினர். சிசோடியாவின் வீட்டில் இருந்து கணினி, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக சிசோடியா, 3 அரசு அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கடந்த பிப்ரவரியில் கைது செய்தனர். தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு விசாரணைக்காக நாளை (ஏப்.16) காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் முதல்வர் கேஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago