‘நிச்சயமாக துன்புறுத்தல்தான்’ - கேஜ்ரிவாலுக்கான சிபிஐ சம்மன் குறித்து கபில் சிபல் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பியிருப்பது குறித்து, ‘நிச்சயமாக இது துன்புறுத்தல் தான்’ என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லியின் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்காக ஞாயிற்றுக்கிழமை (ஏப்.16) காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் முதல்வர் கேஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர்,"கேஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. பாஜக சொல்கிறது: சட்டம் இருக்கிறது; என்னுடைய நிலைப்பாடு: துன்புறுத்தல் நடக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

கபில் சிபல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். அவர் கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸில் இருந்து வெளியேறி, சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு மாநிலங்களவைக்கு தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சிபிஐ சம்மன் அனுப்பியதை ஆம் ஆத்மி கட்சியும் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி எம்.பி. சஞ்சய் சிங் டெல்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ‘‘டெல்லி சட்டப்பேரவையில் சமீபத்தில் பேசிய முதல்வர் கேஜ்ரிவால், அதானி குழுமத்தின் கறுப்பு பணம், பிரதமர் நரேந்திர மோடியுடையது என்று குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து கேஜ்ரிவாலை சிறையில் அடைக்க சதி நடக்கிறது. இதன்படியே சிபிஐ தரப்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஊழலை மறைக்க, பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்’’என்று தெரிவித்திருந்தார்.

சம்மன் குறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறும்போது, “டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மற்றும் சில சாட்சிகள் முதல்வர் கேஜ்ரிவால் பெயரைக் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பி உள்ளோம்’’ என்று தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE