புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி அவர் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார்.
டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் தலைமைச்செயலர் நரேஷ் குமார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிக்கை அளித்தார். அதன்பேரில், சிபிஐ விசாரணை நடத்த ஆளுநர் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, அப்போதைய டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் சோதனை நடத்தினர். சிசோடியாவின் வீட்டில் இருந்து கணினி, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக சிசோடியா, 3 அரசு அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சூழலில், மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கடந்த பிப்ரவரியில் கைது செய்தனர். தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு விசாரணைக்காக நாளை (ஏப்.16) காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் முதல்வர் கேஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதை ஆம் ஆத்மி கட்சியும் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி எம்.பி. சஞ்சய் சிங் டெல்லியில் நேற்று கூறியபோது, ‘‘டெல்லி சட்டப்பேரவையில் சமீபத்தில் பேசிய முதல்வர் கேஜ்ரிவால், அதானி குழுமத்தின் கறுப்பு பணம், பிரதமர் நரேந்திர மோடியுடையது என்று குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து கேஜ்ரிவாலை சிறையில் அடைக்க சதி நடக்கிறது. இதன்படியே சிபிஐ தரப்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஊழலை மறைக்க, பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்’’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறும்போது, “டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மற்றும் சில சாட்சிகள் முதல்வர் கேஜ்ரிவால் பெயரை கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பி உள்ளோம்’’ என்று தெரிவித்தன.
தொழிலதிபர் வாக்குமூலம்: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தொழிலதிபர் சமீர் மகேந்திரு மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த நவம்பரில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சில முக்கிய தகவல்களை வாக்குமூலமாக அளித்தார்.
அவர் கூறியிருந்ததாவது: சிசோடியாவின் பிரதிநிதியாக செயல்பட்ட விஜய் நாயர் என்பவர் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் ஃபேஸ்டைம் வீடியோ கால் மூலம் பேசுவதற்கு ஏற்பாடு செய்தார். அப்போது கேஜ்ரிவாலுடன் வீடியோ அழைப்பில் பேசினேன். ‘‘விஜய் நாயர் எங்களுடைய ஆள். அவரை முழுமையாக நம்பலாம். மதுபான உரிமம் தொடர்பாக விஜய் நாயரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம்’’ என்று கேஜ்ரிவால் என்னிடம் உறுதி அளித்தார்.
இதன்பிறகே மதுபானக் கடை உரிமம் தொடர்பாக விஜய் நாயருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர் கோரியபடி பணத்தை கொடுத்தேன். என்னைப் போன்று ஏராளமான தொழிலதிபர்களிடம் விஜய் நாயர் பேரம் பேசினார். இவ்வாறு சமீர் மகேந்திரு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த எம்.பி.மகுந்தா சீனிவாசலு ரெட்டியும் கேஜ்ரிவாலை சந்தித்து பேசியுள்ளார். அவரும் மதுபானக் கடை உரிமம் தொடர்பாக கேஜ்ரிவாலுடன் பேரம் நடத்தியிருக்கிறார். வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக மாறியுள்ள 2 பேர் இந்த தகவல்களை உறுதிசெய்துள்ளனர். இவற்றின் அடிப்படையில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது.
‘ஊழலற்ற ஆட்சி நடத்துவோம்’ என்ற வாக்குறுதியுடன் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. இதே வாக்குறுதியுடன் பஞ்சாபிலும் அந்த கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் மணிஷ் சிசோடியாவும், பண மோசடி வழக்கில் ஆம்ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயினும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்போது முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கேஜ்ரிவாலிடம் ஊழல் வழக்கில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இது ஆம் ஆத்மியின் அரசியல் பயணத்தில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றுஅரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
வலைதளத்தில் ‘15 கிலோ நெய்’ கேட்ட கேஜ்ரிவால்: டெல்லியில் மதுபானக் கடைகளின் உரிமங்களை பெற்றதில் சவுத் குரூப் என்ற நிறுவனம் மிகப்பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த நிறுவனம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் பினாமி நிறுவனம் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மணிஷ் சிசோடியாவின் உதவியாளரான விஜய் நாயர் என்பவர் கவிதா மற்றும் சவுத் குரூப் நிறுவன நிர்வாகிகளிடம் பேரம் பேசி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இரு தரப்புக்கும் இடையே ரூ.219 கோடிக்கு பணப் பரிமாற்றம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பணப் பரிமாற்றத்தின்போது டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சில ரகசிய வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியபோது, ‘‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் பினாமி என்று கருதப்படும் தொழிலதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளைக்கு கேஜ்ரிவால் கடந்த ஆண்டில் டெலிகிராம் வலைதளம் மூலம் ஒரு தகவல் அனுப்பியுள்ளார். அதில், ‘15 கிலோ நெய் வேண்டும்’ என்று கேட்டுள்ளார். இது ரூ.15 கோடி ரொக்க பணம் என்பதை குறிக்கிறது. இதன்படி ஆம் ஆத்மி தரப்புக்கு பணம் கைமாறியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago