மொசாம்பிக் நாட்டுக்கு சென்றபோது இந்தியாவில் தயாரான ரயிலில் பயணம் செய்த ஜெய்சங்கர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உகாண்டா மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு கடந்த 13-ம் தேதி முதல் 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

உகாண்டாவில் அந்நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியை சந்தித்து வர்த்தகம், உள்கட்ட மைப்பு, எரிசக்தி மற்றும் பாதுாப்பு துறைகளில் கூட்டுறவுடன் செயல் படுவது குறித்து பேசினார்.

பின்னர் மொசாம்பிக் நாட்டுக்கு சென்ற அமைச்சர் ஜெய்சங்கர், தலைநகர் மபுதோவில் அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் மாடேஸ் மகலாவை சந்தித்து பேசினார். அப்போது ரயில், மின்சார வாகனம் மற்றும் நீர்வழி போக்குவரத்து போன்ற பசுமை போக்குவரத்து திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மொசாம்பிக் நாட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது இதுவே முதல் முறை.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் மொசாம்பிக் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அந்த ரயிலில், மொசாம்பிக் போக்குவரத்து அமைச்சர் மாடேஸ் மகலாவுடன் இணைந்து தலைநகர் மபுதோவில் இருந்து மசாவா என்ற இடம் வரை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம் செய்தார்.

மபுதோ நகரில் உள்ள ஸ்ரீவிஸ்வாம்பர் மகாதேவ் கோயிலுக்கும் அமைச்சர் ஜெய் சங்கர்சென்று வழிபட்டார். அங்கு இந்தியர்களை சந்தித்தும் அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார். இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE