நாட்டின் உயரமான அம்பேத்கர் சிலை - ஹைதராபாத்தில் திறந்து வைத்தார் முதல்வர் கேசிஆர்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது 125 அடி உயர சிலையை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்(கேசிஆர்) திறந்து வைத்தார்.

நாட்டிலேயே உயரமான இந்த வெங்கலச் சிலை, ஹைதராபாத்தின் புகழ்பெற்ற ஹூசைன் சாகர் ஏரி கரையில், தலைமைச்செயலகத்திற்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது. ரூ.146.50 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலைக்காக 360 டன் துருபிடிக்காத இரும்பும், 114 டன் வெங்கலமும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

பிரம்மாண்டமாக நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக ஹெலிகாப்டரில் இருந்து சிலைக்கு மலர்கள் தூவப்பட்டன. இந்த விழாவில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
பிரம்மாண்ட விழாவில் பங்கேற்பதற்காக 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து, 35,000க்கும் அதிமான மக்கள் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்க பொதுமக்களின் வசதிக்காக மாநில போக்குவரத்து கழகம் சார்பில் 750க்கும் அதிமான பேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவில் பங்கேற்க வரும் மக்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரு லட்சம் இனிப்பு பொட்டலங்கள், 1.50 லட்சம் மோர், அதே அளவு தண்ணீர் பாக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

முன்னதாக, இந்த பிரம்மாண்ட சிலையை செய்வதற்காக மிகவும் பாடுபட்ட 98 வயதான சிற்பி ராம் வஞ்சி சுதாரை முதல்வர் கே.சந்திர சேகரராவ் பாராட்டியிருந்தார். சிலை குறித்து, "தெலங்கானா தியாகிகள் நினைவிடம், மாநில சட்டப்பேரவை கட்டிடம் ஆகியவற்றுக்கு அருகில் இருக்கும் இந்தியாவின் உயரமான இந்த அம்பேத்கர் சிலை, தினமும் மக்களுக்கு உந்து சக்தியாகவும் மாநில நிர்வாகத்திற்கான ஊக்கமாகவும் இருக்கும்" என்று கே. சந்திர சேகர ராவ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE