மே. வங்க அரசியல் | நாடாளுமன்றத் தேர்தலில் 35 தொகுதிகளை தாருங்கள்; மம்தா அரசு முன்கூட்டியே கவிழும்: அமித் ஷா

By செய்திப்பிரிவு

பிர்பூம் (மேற்கு வங்கம்): வரும் மக்களவைத் தேர்தலில் மாநிலத்திலுள்ள 42 தொகுதிகளில் 35 இடங்களில் பாஜக-க்கு வெற்றியைத் தாருங்கள்; அதன்பின் மம்தா அரசு முன்கூட்டியே கவிழ்வதைப் பார்ப்பீர்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலம் சென்றுள்ளார். பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கத்திற்கு 11 மாதங்களுக்கு பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) சென்ற அமைச்சர், பிர்பூம் மாவட்டத்தின் சூரி என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஜன் சம்பர்க் சமாவேஷ்’ பேரணியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் வன்முறை இல்லாத, ஊடுருவல் நடக்காத, பசு கடத்தல் இல்லாத, ஊழல் அற்ற ஆட்சி அமைய பாஜவுக்கு வாக்களியுங்கள்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 35 இடங்களைத் தாருங்கள். அதன்பிறகு ராம நவமி ஊர்வலத்தின் மீது கை வைக்க யாருக்கும் துணிவு வராது. மாநிலத்தில் இருக்கும் மம்தா அரசு 2025-ம் ஆண்டுக்கு முன்பாக கவிழும். முதல்வர் மம்தா பானர்ஜி தனக்கு பின்னர் தனது மருமகன் தான் முதல்வராக வேண்டும் என கனவு காண்கிறார். மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் பாஜகவில் இருந்தே வருவார் என இன்று நான் உங்களுக்கு உறுதி தருகிறேன். மம்தா பானர்ஜி-யும் அவரது மருமகனும் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும்" என தெரிவித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல, 2021ம் ஆண்டு நடந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் 213 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இந்தாண்டு மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், உள்துறை அமைச்சர் இன்றைய தனது பேச்சில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரையும் அவரது மருமகனையும் கடுமையாக தாக்கிப்பேசினார். தனது பேச்சில் ராமநவமி வன்முறை, ஊழல், பசு கடத்தல் குறித்து எடுத்துரைத்தார். அண்டை மாநிலமான அஸ்ஸாமில் கடத்தல்கள் தடுக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

அமித் ஷாவின் இந்த பேச்சிற்கு திரிணாமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியில் இருந்து ஒரு ‘வலசைப்பறவை’(seasonal bird) இங்கே வந்துள்ளது. ஆனால் அதனை பார்க்க யாரும் விரும்பவில்லை. அமித் ஷா, நீங்கள் டெல்லிக்குத் திரும்பி சென்று உங்களுடைய வேலையைப் பாருங்கள். மேற்கு வங்கத்தில் உங்களுடைய குப்பைப் பேச்சு, பொய்கள், வெறுப்பு கொள்கைகளில் யாருக்கும் ஆர்வமில்லை. வேறு எங்காவது சென்று விஷத்தைக் கக்குங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்று பிர்பூம் மாவட்டத்தில் உள்துறை அமைச்சர் கூட்டம் நடந்த அதே இடத்தில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக, ஞாயிற்றுக்கிழமை திரிணாமூல் காங்கிரஸ் கூட்டம் நடத்த இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE