பஞ்சாப் ராணுவ முகாமில் 4 வீரர்கள் சுட்டுக் கொலை - தாக்குதல் நடத்திய சக வீரர் யார்?

By செய்திப்பிரிவு

பதிண்டா: பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.35 மணி அளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து, ராணுவ முகாமை அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர். நுழைவுவாயில்கள் மூடப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது, ராணுவ முகாமில் 4 வீரர்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் அனைவரும் பீரங்கிப் படையை சேர்ந்தவர்கள். ராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேரும் உயிரிழந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் யார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக அடையாளம் தெரியாத 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து பஞ்சாப் ஏடிஜிபி பர்மர் கூறியபோது, ‘‘தீவிரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. ராணுவ முகாமில் இருந்த வீரர், சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 4 வீரர்கள் உயிரிழந்தனர். 2 நாட்களுக்கு முன்பு ராணுவ முகாமில் ஒரு இன்சாஸ் துப்பாக்கி, 28 குண்டுகள் மாயமாகின. அதற்கும், இச்சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இதன் பின்னணியில் ராணுவ வீரர்கள் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இதுகுறித்து ராணுவத்தினர், பஞ்சாப் போலீஸார் இணைந்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இச்சம்பவம் தொடர்பாக யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். ஊடகங்கள், ஊகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிட வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE