காங்கிரஸ் மேலிடம் எதிர்ப்பை மீறி ராஜஸ்தானில் சச்சின் பைலட் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் மேலிடம் விடுத்த எச்சரிக்கையை மீறி, ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் நேற்று ஜெய்ப்பூரில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2020-ல் கெலாட் தலைமைக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதனால் அம்மாநிலத்தில் சுமார் ஒரு மாத காலம் அரசியல் நெருக்கடி நிலவியது. பிறகு கட்சி மேலிடம் தலையிட்டு இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் கெலாட் - சச்சின் இடையிலான மோதல் தற்போது மீண்டும் வெடித்துள்ளது.

குறிப்பாக வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பாஜக அரசு மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக அசோக் கெலாட் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சச்சின் பைலட் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார். கோரிக்கையை வலியுறுத்தி ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை (நேற்று) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா கூறும்போது, “மாநில அரசுக்கு எதிரான எந்தவொரு போராட்டமும் கட்சி விரோத நடவடிக்கை ஆகும். இது கட்சியின் நலனுக்கு எதிரானது ஆகும்” என்றார்.

இந்நிலையில் கட்சி மேலிடத்தின் எச்சரிக்கையை மீறி சச்சின் பைலட் நேற்று ஜெய்ப்பூரில் உண்ணாவிரதம் இருந்தார். முன்னதாக சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் புலே படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய அவர் காலை 11 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கினார். மாலை 4 மணி வரை அவரது உண்ணாவிரதம் நீடித்தது. இதில் சச்சின் ஆதரவு தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் மாநிலத்தில் உள்ள தலைமைப் பிரச்சினையைத் தீர்க்க கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

வீடியோ வெளியீடு: இதனிடையே முதல்வர் அசோக் கெலாட் 2030-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தான் மாநிலத்தை முன்னணிமாநிலமாக மாற்றும் தனது தொலைநோக்கு திட்டம் தொடர்பான வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார்.

இதில் தனது அரசின் பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் பட்டியலிட்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE